இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை (Corona Second Wave) தாக்கத்தால் ஊரடங்கு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் இன்னும் கடுமையாகலாம் என்ற நிலை இருக்கிறது. இதற்கிடையில் இன்று காலை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது முக்கிய அறிவிப்புகளை சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவுவதால், இந்தியப் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் இருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கம்
கொரோனா பாதிப்பால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி (RBI) தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தற்போதைய நிலைமையை ரிசர்வ் வங்கி மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தாலும் அது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டைப் போல இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்படவில்லை. ஓரிரு மாநிலங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் இருக்கிறது.
முக்கிய அறிவிப்பு
ரூ.25 கோடி வரையில் கடன் பெற்ற தனிநபர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் கடன் தவணைச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதன்படி, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. ரூ.25 கோடி வரையில் கடன் பெற்றவர்கள் ரிசர்வ் வங்கியின் கடன் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றனர். ஏற்கெனவே, சென்ற ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவர்கள் சலுகைக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் கடன் சீரமைப்புப் பணி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் சுகாதாரத்துறை கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி அவசர ஊக்கத்தொகையும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வங்கிக் கடனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் சக்திகாந்த தாஸ் கூறினார்.
மேலும் படிக்க
தொடங்கியது அக்னி நட்சத்திரம்! செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதவையும்!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!