தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடரும் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அநேக பகுதிகளில் தொடர்ந்து லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் அணைகளின் நீர் மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கனமழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது, குறிப்பாக வட தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மழை
ஓசூரில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது மற்றும் பழைய நகராட்சி அலுவலகத்தின் முன்பு மழை நீர் தேங்கியது.
சீர்காழியில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசிய நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிச்சி நிலவியது. கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவில் விட்டு விட்டு பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது.
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. புதுச்சேரியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.
K.Sakthipriya
Krishi Jagran