Others

Wednesday, 25 September 2019 11:08 AM

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும். 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

இதையடுத்து இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பம் நிலவிய நிலையில் நேற்று திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம், துலுக்கனூர், பைத்தூர் உள்ளிட்ட இடங்களில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மேலூர், கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. மூங்கில் மண்டபம், ரங்கசாமிகுளம், பெரியார் நகர், செவிலிமேடு, ஓரிக்கை பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை மக்கள் பாத்திரங்களை கொண்டு வெளியேற்றினர்.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்ததன் காரணமாக 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதே போல் கொடைக்கானலில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் கடந்த திங்கள் கிழமை பெய்த கனமழைக்கு பிறகு இன்று காலையில் இருந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலான  மழை பெய்து வருகிறது.

அதிக பட்ச மழை பொழிவாக திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 16 செ.மீ மழையும், கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ மழையும், திண்டுக்கல் வேடசந்தூரில் 13 செ.மீ மழையும், தஞ்சையின் பட்டுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை கீரனூரில் 11 செ.மீ மழையும், தஞ்சாவூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் 10 செ.மீ மழையும், மேட்டூர் வாழப்பாடியில் 9 செ.மீ மழையும், ராமேஸ்வரம் மற்றும் சேலத்தில் ஓமலூர் பகுதியில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

K.Sakthipriya
Krishi Jagran 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)