இருபது ஆண்டுகளுக்கு முன்பு டிவி தொடர்களில் (TV Serials) குடும்ப உறவுகளின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் கதைகள், சரித்திர கதைகள், அறிவியல் உண்மைகள் தொடர்கள் ஒளி பரப்பப்பட்டன. இத்தகைய தொடர்கள் பார்க்கும் குழந்தைகள், இளைஞர்கள் அறிவை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தது. இன்றைய தொடர்கள் பெரும்பாலும் குடும்ப நிகழ்வுகளை சுற்றி அமைந்தாலும் குடும்ப உறவுகளை கொச்சைபடுத்தும் விதமாக தான் உள்ளது. இன்றைய தொடர்களில் காட்டப்படும் பெண் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் தவறான சிந்தனை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் தான் காட்டப்படுகிறது.
விளைவுகள்
குடும்பத்தில் மூத்தவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் குறைகிறது. கொஞ்சம் 'ரிலாக்ஸ்' செய்யவும், 'டென்ஷன்' குறைக்கவும் தான் மக்கள் டிவி யை பார்க்கின்றனர். ஆனால் தொடர்களில் வரும் காட்சிகள் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது. குடும்ப உறவுகளை 'புரோமோ' மட்டும் ஒருசில நிமிடங்கள் நன்றாக காட்டி விட்டு தொடர் முழுவதும் உறவுகளை கெடுப்பது, விதவிதமாக கொல்வது போன்ற யுக்திகளை சொல்லி தருகின்றனர். பாட்டியை கூட 'வில்லி' யாக காட்டி, பெரியவர்கள் பாசம் மிக்கவர்கள் என்ற நம்பிக்கையை தகர்க்கின்றனர். இது தொடர்பான விளைவுகள் குறித்து பலரும் பட்டாசாய் பகிர்ந்துள்ளனர்.
காளீஸ்வரி, பி.ஏ., கல்லுாரி மாணவி : வீட்டிலும், கல்லுாரிகளிலும் மாணவர்களிடம் சிந்தனைகள் பற்றிய பேச்சு போய் டிவி யில் வெள்ளிக் கிழமை தொடர் எப்படி இருக்குமோ என்று கவலைப்படும் அளவிற்கு இளைய சமுதாயத்தை தொடர்கள் கெடுத்து விட்டன. இளைய சமுதாயத்தினர் எதை எல்லாம் கற்று கொள்ளக் கூடாதோ, அவற்றை எல்லாம் கற்று தருகின்றன. உறவுகளை கெடுக்கும் விதமாக தொடர்கள் செயல்படுகின்றன.
Also Read : பால் பாக்கெட் கவர்களை இனிமே குப்பையில் போடாம இப்படி பயன்படுத்துங்கள்!
சுப்புலட்சுமி, குடும்பதலைவி : குடும்பத்தில் பிரச்னைகள் உருவாக டிவி தொடர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. நான் தொடர்களை பார்ப்பது நிறுத்தி பல ஆண்டுகள் ஆகி விட்டன. உறவுகளில் எந்ததெந்த முறையில் கெடுக்கலாம் என்பதை தொடர்கள் கற்று தருகின்றன. நன்றாக இருந்த குடும்பங்கள் நாசமாக போவதற்கு டிவி தொடர்கள் காரணமாக அமைகின்றன. பெரியவர்களை எதிர்த்து பேசும் வருங்கால சந்ததியினர் கெட தொடர்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜெயலட்சுமி, தலைவர்: இன்றைய தொலைகாட்சி தொடர்கள் நம் வீட்டில் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணங்களை கூட குறைய செய்து விடுகிறது. நமது இயல்பான வாழ்க்கைக்கு எதிரானது என்பதை கூட இன்றைய பெண்களால் உணர முடியாத அளவிற்கு, தொடர்கள் அவர்களை ஆட்கொண்டுள்ளது. குடும்பத்தில் விட்டு கொடுக்கும் மனப்பான்மையை முற்றிலும் தகர்த்த சாதனையை தொடர்கள் செய்து வருகின்றன; இந்நிலை மாற வேண்டும். தொடர்களுக்கு கட்டுப்பாடு அவசியம் தேவைப்படுகிறது.
மீனா, பேராசிரியர் : தொடர்கள் பார்க்கும் இளைய சமுதாயத்தினர் அதில் காட்டப்படும் இரட்டை அர்த்த வசனங்கள், தவறான உறவுகள் போன்ற விஷயங்களில் ஈர்க்கப்படுகின்றனர். இவை குழந்தைகளிடம் எதிர் மறையான சிந்தனைகளை வளர்க்கிறது. பெற்றோர்களுடன் சேர்ந்து தொடர்கள் பார்ப்பதால் அவற்றிற்கு அடிமையாகி விடுகின்றனர். படிப்பதில் நாட்டம் குறைந்து, தொடர்களை பார்க்க ஆவல் கூடுகிறது. அர்த்தமற்ற கதைகளம் கொண்ட தொடர்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம்: தமிழக அரசு அறிவிப்பு!
மருத்துவ காப்பீடு பாதுகாப்பு: மேம்படுத்தும் வழிமுறைகள்!