பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. இளம் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இந்த பட்டியலில் அடங்குகின்றனர். ஸ்மார்ட்போன்கள், ஹிட்டன் கேமராக்கள் போன்ற பல நவீன சாதனங்கள் நன்மையை தருவது மட்டுமின்றி குற்றச் சம்பவங்களுக்கு மறைமுகமாக வழிவகுக்கின்றன. சாதாரண கேமரா வசதியுள்ள போன் இருந்தாலே போதும், பெண்களை ஆபாசமாக போட்டோ அல்லது வீடியோ எடுத்துக்கொண்டு மிரட்டும் நிகழ்வுகள் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. இதில் நவீன ஹிட்டன் கேமராக்கள் வேறு லெவலில் உள்ளது. எனவே வெளியிடங்களுக்கு செல்லும் போது உஷாராக இருக்க வேண்டியுள்ளது.
ரகசிய கேமரா (Hidden Camera)
ஹோட்டல் அறைகளில் தங்கும் போது, ஷாப்பிங் மால், ரெடிமேடு ஷோரூம்களில் உடைகளை அணிந்து பார்க்கும்போது கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். அதேவேளையில் ஒருசில நிமிடங்கள் செலவழித்தாலே போதுமானது; இந்த மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களை எளிதாக உணரலாம். ஹோட்டல் அறைக்குள் நுழைந்தவுடன் அனைத்து பொருட்களையும் நிதானமாக ஒரு பார்வை பார்க்கவும். அங்கு, ஸ்குரு'வின் தலைப்பகுதி, பிளக் பாய்ன்ட், பிளக் ஹோல்டர், கதவின் கைப்பிடி, புத்தகங்கள், டிவி, டேபிள், சுவர் அலங்காரம், அழகுச் செடிகள், சுவர் கடிகாரம், கண்ணாடி, படுக்கை மெத்தைகள், மேஜை மற்றும் அலமாரிகள், அலங்கார விளக்குகள், ஹேர் டிரையர், ஹேங்கர்கள், மேற்கூரை போன்ற அனைத்து இடங்களையும் நிதானமாக பார்க்கவும்.
கண்டறியும் வழிமுறை (Finding Methods)
ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, அறை முழுவதையும் உங்கள் செல்போனில் வீடியோ எடுங்கள். பின், அதை ஓட விட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா உள்ளது என அர்த்தம்.
செல்போனில் யாரிடமாவது பேசியபடியே அறை முழுவதும் மெதுவாக நடக்கவும். அப்போது செல்போனில் இரைச்சல் சத்தம் கேட்டால் அருகில் ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளன என அறியலாம்.
உடை மாற்றும் டிரையல் அறைகளில் உள்ள கண்ணாடி சாதாரணக் கண்ணாடியா அல்லது வேவு பார்க்கும் கண்ணாடியா என்பதை அறிய, கண்ணாடி மீது உங்களின் விரலை வைத்துப் பாருங்கள். கண்ணாடியில் உங்கள் விரல் ஒட்டாவிட்டால் அது சாதாரணக் கண்ணாடி. கண்ணாடியில் உங்கள் விரல் ஒட்டினால் அது வேவு பார்க்கும் கண்ணாடி.
நவீன தொழில்நுட்பம் காரணமாக விதவிதமான சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மலிவான விலைகளிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. எனவே கேமரா டிடெக்டர் மூலமாகவும் பரிசோதனை செய்யலாம்.
அறையில் அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஸ்பாட் விளக்குகளை மட்டும் ஒளிரச் செய்து புகைப்படம் எடுக்கவும். பின்னர், அனைத்து புகைப்படங்களும் ஒரேமாதிரி உள்ளதா என சரிப்பார்க்க வேண்டும். ஏதாவது ஒரு ஸ்பாட் விளக்கில் வித்தியாசம் தெரிந்தால் அங்கு ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம்.
மேலும் படிக்க
ஆன்லைன் விளையாட்டை எதிர்ப்பவரா நீங்கள்: தடை செய்ய கருத்து சொல்லுங்கள்!
ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச டியூஷன்: ஆகஸ்ட் 15 முதல் தொடக்கம்!