தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்து சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் செய்தனர்.
அகவிலைப்படி (Allowance)
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படு ஏற்கெனவே இருந்த 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதையடுத்து மற்ற மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என்று உறுதியளித்தது. இன்னும் சில முக்கியமான வாக்குறுதிகளையும் வழங்கியது. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு நிதிச் சுமையைக் காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற தயக்கம் காட்டுவதாக அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல் அகவிலைப்படி உயர்வினை, உரிய கால இடைவெளிகளில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டதைப் போன்று தமிழக அரசு வழங்க வேண்டுமென அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 3 தவணைகளாக அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு, தொடர்ந்து காலதாமதமாக அறிவித்து வரும் போக்கினை கைவிடக் கோரி வலியுறுத்தியுள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு வழங்காதது மற்றும் உரிய காலத்தில் வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து சேலம் மாவட்ட கல்வித் துறையில் கருப்பு பட்டை அணிந்து பணி புரியும் போராட்டம் செய்தனர். அதேபோல, சேலம் மாவட்டம் வணிக வரித் துறை அலுவலர்களும் கருப்பு ஆடை மற்றும் கருப்பு பட்டை அணிந்து போராடினர். அகவிலைப்படி உயர்வு வழங்கும் வரை தொடர்ந்து போராடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)
அகவிலைப்படி உயர்வு மட்டுமல்லாமல், தற்போது நடைமுறையில் இருக்கும் CPS திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு போராட்டங்களை தமிழக அரசு ஊழியர்கள் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கூட நடைபயண போராட்டம் சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
பென்சன் வாங்குவோர் சிலர் மட்டும் இதை செய்ய வேண்டாம்: ஏன் தெரியுமா?
பெண்களுக்கு ஏற்ற சிறப்பான சேமிப்புத் திட்டம்: வெறும் 500 ரூபாயில்!