புதிய 100 ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டு விரைவில் புழக்கத்திற்கு வெளியிடப்பட உள்ளன. பணப்புழக்கத்திற்கு வரும், புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு எப்போதுமே மவுசுதான். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டவை என்னிடம் உள்ளது எனச் சொல்லிக் கொள்வதில் தனி பெருமை உள்ளது.
அதிலும் ரூபாய் நோட்டுகளை விட, நாணயங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எளிது. ஏனெனில் ரூபாய் நோட்டுகள் கிழிந்துவிடும் ஆபத்து உள்ளது. நாணயத்தில் அந்தத் தொல்லை இல்லவே இல்லை.
அந்த வரிசையில் இந்தியாவில்,2000 ரூபாய் 200 ரூபாய் என இதற்கு முன்னர் நாம் பார்த்திராத ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன.
அதேபோல, 10 ரூபாய் நாணயங்களின் புழக்கமும் அதிகரித்தது. புதிய வடிவிலான ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களும் அச்சிடப்பட்டன.
ரூபாய் நோட்டுகளைப் போலவே, 1000 ரூபாய் நாணயம், 2000 ரூபாய் நாணயம், 200 ரூபாய் நாணயம் போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். ஆனால் அவை நம் கைகளுக்கு வந்திருக்காது.
இந்த மாதிரியான அதிக மதிப்பு கொண்ட நாணயங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.இதுபோன்ற நாணயங்கள், பொதுமக்களின் புழக்கத்துக்காக அச்சிடப்படுவது கிடையாது. இவை சிறப்பு நாணயங்கள். அரசு சார்ந்த ஏதேனும் ஒரு விஷயத்தை சிறப்பிக்கவோ அல்லது மரியாதை நிமித்தமாகவோ இதுபோன்ற நாணயங்கள் அவ்வப்போது அச்சிடப்படும். அவை பொதுமக்களின் புழக்கத்துக்கு விடப்படாது. அந்த வகையில் தற்போது 100 ரூபாய் நாணயம் அச்சிடப்படுகிறது.
இந்த 100 ரூபாய் நாணயம் டெல்லி பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் அச்சிடப்படுகிறது. இந்த நாணயம் 44 மில்லி மீட்டர் விட்டத்தில் 35 கிராம் எடையுடன் இருக்கும். இந்த நாணயத்தில் சிங்க முகங்கள் கொண்ட அசோகர் தூண் பொறிக்கப்பட்டிருக்கும். சத்யமேவ ஜயதே என்று இந்தியில் எழுதப்பட்டிருக்கும். பாரத் என தேவநாகரி மொழியிலும், இந்தியா என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். நாணயத்தின் பின் புறத்தில் டெல்லி பல்கலைக் கழகத்தின் புகைப்படம் இருக்கும். CENTENARY YEAR OF UNIVERSITY OF DELHI என்று குறிப்பிடப்பட்டிருக்கும். 2022 என்ற ஆண்டுக் குறிப்பும் இந்த நாணயத்தில் இடம்பெற்றிருக்கும்.
இதுபோன்ற உயர் மதிப்பு கொண்ட நாணயங்கள் புழக்கத்துக்கு வந்தால் ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். ஆனால் அவை தொலைந்துவிட்டால் பெரிய தொகையை இழக்க நேரிடும். இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் பெரிய மதிப்பு கொண்ட நாணயங்கள் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை.
மேலும் படிக்க...