1. செய்திகள்

பரப்பலாறு அணை திறப்பு| மெட்ரோ ரயிலில் புதிய திட்டம்| ஆறு விவசாயிகளுக்கு பரிசு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

வேளாண் அலுவலர்களுக்கு பாடம் புகட்டிய தலைமைச்செயலாளர்:

நடப்பாண்டு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண் அதிகாரிகளிடம் உரையாடிய தலைமைச்செயலாளர், கோப்புகளைப் பார்க்கும் பணியல்ல உங்கள் பணி; தோப்புகளைப் பார்க்கும் பணி- தபால்களைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்கு முன் பயிர்களைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுங்கள். அலுவலகத்தில் அமர்ந்து கண்காணிக்காமல், வரப்பில் நடந்து பயிர்கள் பச்சை தொற்றிக்கொள்வதைப் பார்க்கும் பணி உங்களது என தெரிவித்துள்ளார்.

ஆறு சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கினார் தமிழக வேளாண் அமைச்சர்

சென்னையில் நடைப்பெற்ற நிகழ்வில், புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் புதிய இயந்திரம் வடிவமைத்து பயன்படுத்தி வரும் இரண்டு விவசாயிகள் மற்றும் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வரும் மூன்று விவசாயிகள், வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் ஒரு விவசாயி என மொத்தம் 6 விவசாயிகளுக்கு அவர்களது பணியை பாராட்டி விருது வழங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறையில் பணிப்புரிந்து பணிக்காலத்தில் இயற்கையெய்திய பணியாளர்களின் 19 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும் வழங்கினார்.

பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள பெருமாள் குளம், முத்துபூ பாலசமுத்திரம் கண்மாய், சடையகுளம், செங்குளம், இராம சமுத்திரக் கண்மாய் மற்றும் ஜவ்வாதுப்பட்டி பெரியகுளம் ஆகிய 6 குளங்களுக்கு, பாசன நிலங்கள் பயன்பெறும் பொருட்டு நாளை முதல் 27.05.2023 வரை 47.04 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1323 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோனின் செயல்பாடு- கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை

ட்ரோன் மூலம்‌ பயிர்களை தாக்கும்‌ நோய்‌, பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும்‌ முறை தற்போது பரவலாகி வருகிறது. இதனிடையே கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் ட்ரோனில் உள்ள இறக்கையின்‌ மூலம்‌ ஏற்படும்‌ காற்றின்‌ விசையை அளவீடு செய்ய பிரத்யேகமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கான காப்புரிமையினை தற்போது  ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

இராசயன உரங்கள் இருப்பில் சாதனை- வேளாண் அமைச்சர் அறிக்கை

பயிர் சாகுபடிக்குத் தேவையான இரசாயன உரங்கள் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் 4,55,568 டன் இருப்பு உள்ளதாக தமிழக வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள கோடை, குறுவை, முன் சம்பாப் பருவத்திற்குத் தேவையான மொத்த உரத் தேவையில் 43 சதவீத உரங்கள் தற்போது மாநிலத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, யூரியா தேவையில் 39 சதவீதமும், டிஏபி தேவையில் 50 சதவீதமும், காம்ப்ளக்ஸ் தேவையில் 60 சதவீதமும், சூப்பர் பாஸ்பேட் தேவையில் 38 சதவீதமும் இருப்பு உள்ளது. பொட்டாஷ் உரத்தைப் பொறுத்தவரை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மெட்ரோ ரயிலில் மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர பாஸ்:

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகள் குறித்து நடத்திய ஆய்வில் 40 சதவீதம் பேர் கல்லூரி மாணவ, மாணவியர்கள், 47 சதவீதம் பேர் பணிக்கு செல்லக்கூடியவர்கள், 13 சதவீதம் பேர் எப்போதாவது மெட்ரோவில் பயணிக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேருந்து, மின்சார ரயிலில் வழங்குவதுப்போல மாதாந்திர பாஸ் வழங்க மெட்ரோ நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மேலும் காண்க:

TNAU: வேளாண் UG, Diploma படிப்புக்கு மாணவர் சேர்க்கை- முழு விவரம் காண்க

English Summary: Operation of drone- Copyright to Coimbatore Agricultural University Published on: 14 May 2023, 02:07 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.