கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் விவசாயிகளை கௌரவிக்க தொடங்கப்பட்ட மில்லினியர் விவசாயி விருதுக்கு நீலகிரி மாவட்டத்தினை சேர்ந்த இயற்கை விவசாயி சிவதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுக்குறித்து சமீபத்தில் கிரிஷி ஜாக்ரன் அவருடன் கலந்துரையாடியது.
இந்த நேர்காணலில் செயற்கை உரங்களை பயன்படுத்தி வந்த நிலையில் இயற்கை விவசாயத்திற்கு மாறியது ஏன்? முதுமலை போன்ற பகுதிகளில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? போன்றவை குறித்து பல்வேறு விஷயங்களை நம்முடன் சிவதேவன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
கே: எவ்வளவு வருடமாக விவசாயத்தில் ஈடுபடுறீங்க? என்ன மாதிரி பயிரெல்லாம் சாகுபடி செய்றீங்க?
பதில்: “ நான் கடந்த 25 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். முதலில் செயற்கை உரங்களை அளித்து தான் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்தேன், பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக இயற்கை முறையிலான விவசாயத்தில் தான் ஈடுபட்டு வருகிறேன். ஸ்ரீமதுரை மற்றும் முதுமலை பகுதியில் எங்களுக்கு நிலம் உள்ளது. அதில், பாக்கு, ஏலக்காய், தேயிலை, காபி, குறுமிளகு, அவகேடா , 2 ஏக்கரில் வாழை ( நேந்திரன் உட்பட இன்னும் 2, 3 இரகம்) , பாவற்காய், புடலங்காய், பீர்கங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், அரசாணி, பூசணிக்காய் போன்ற காய்கறிகள் 8 ஏக்கரில் பயிரிட்டு வருகிறேன்.
விவசாயம் தாண்டி கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிலும் ஈடுபடுகிறேன். விவசாய பணிகள் முழுமையும் பஞ்சகாவ்யா, மண்புழு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி தான். எங்களின் உரக்கூடாரமே கால்நடைகளை சார்ந்து தான். கால்நடை இல்லாமல் இயற்கை விவசாயம் இல்லை என்றுக்கூட சொல்லலாம்.
இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் உற்பத்தி செலவு வெகுவாக குறைகிறது. அதை விட முக்கியமான விஷயம், நம்ம விளைவிக்கிற காய்கறி பொது மக்களை சென்றடையும் போது அதில் நஞ்சில்லை என்கிற உணர்வு ஆத்ம திருப்தி கொடுக்குது”.
கே: செயற்கை உரம் பயன்படுத்தி வந்த நிலையில் இயற்கை விவசாயத்திற்கு மாறியது ஏன்? எதனால் இந்த மனமாற்றம் வந்தது?
பதில்: “இதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. நானும், எங்களது நிலத்திற்கு அருகாமையில் நிலம் வைத்திருக்கும் நண்பரும் வாழை விவசாயத்தில் ஈடுபட்டிருந்தோம். ரெண்டு பேரும் வாழையின் வளர்ச்சிக்காக உரம் போடுறோம் ஆனாலும் எந்த பயனும் இல்ல. மரத்துக்கு உயிர் இருக்கு, ஆனா வளர்ச்சி வரவே இல்லை.
அப்போது தான் தோட்டகலைத்துறையின் சார்பில் ஆட்மா திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் சுந்தர் இராமன் என்கிற இயற்கை விவசாயியின் தோட்டத்தை நேரடியாக பார்வையிடப் போயிருந்தோம். இயற்கை விவசாயம் குறித்த எங்களுடைய பல சந்தேகங்களுக்கு அவர் தெளிவான விளக்கங்களை கொடுத்தார். அதன்பின் எனது நிலத்தில் உறைந்து போயிருந்த வாழையில் ஜீவாமிர்தம் தெளித்தேன்.15 நாளில் வளர்ச்சியில் மாற்றம் தெரிஞ்சது. ஆனால், ஜீவாமிர்தம் தெளிக்காத என்னுடைய நண்பரின் நிலத்தில் வளர்ச்சியில்லாமல் வாழை அப்படியே இருந்தது.
அப்போ தான் புரிந்தது ஒரு விஷயம். மண்ணுல நுண்ணூயிர் செத்து போயிடுச்சுனு. விவசாயம் செய்கிற மண்ணை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வந்துடுச்சு.”
“பூமியையும், தண்ணீரையும் கெடுக்காமல் ஒரு விவசாயி இருந்தான் என்றால், அந்த விவசாயியிக்கு எந்த வகையிலும் நஷ்டம் என்பதே வராது”
கே: இறுதி கேள்வியாக இயற்கை விவசாயத்தில் இறங்க சிலர் தயங்குறாங்களே.. உங்களுடைய கருத்து என்ன அது குறித்து?
பதில்: “எந்த விவசாயியும் நான் மருந்து அடிச்சு மட்டும் தான் விவசாயம் பண்ணுவேனு இருக்கிறது இல்ல. அவர்களுக்கான பொருளாதார தேவை இங்க அதிகமாக இருக்கு. நீங்க மற்ற வேலைகளுடன் ஒப்பிடுகையில் விவசாயத்துறையில் மட்டும் தான் வருமானத்தின் அளவு அதிகரிக்கவே இல்லை. சரியான ஆதார விலை கிடைக்காமல் தேயிலை விவசாயத்தை விட்டு பலர் போயிட்டாங்க. தேயிலை தோட்டத்தை அழிச்சுட்டு பலர் காபியில் இறங்கிட்டாங்க.
OTP-னு ஒரு விஷயம் சொல்லுவாங்க.. வெங்காயம் (onion), தக்காளி(Tomato), உருளை(potato).. இதெல்லாம் இந்தியாவில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கள். இவற்றின் விலை உயர்ந்தால், அரசாங்கமும் இறக்குமதி எல்லாம் செய்து விலையினை கட்டுக்குள்ளேயே வைத்து இருப்பார்கள். விவசாயி பெரும்பாலும் கடன் காரனாக தான் இருக்கிறார்கள். 50 லட்சம் டர்ன் ஒவர் என்றால் 50 லட்சம் வருமானம்னு இல்ல. 40 இலட்சம் போட்டு 50 லட்சம் வந்திருக்குனு தான் நம்ம புரிந்துக் கொள்ள வேண்டும்.”
நஞ்சில்லாத விளைப்பொருட்களின் மீது பொதுமக்களின் ஆர்வம் அதிகரிக்கும் போது இயற்கை விவசாயம் பண்ற விவசாயிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கும் என நான் நம்புகிறேன் என தனது கருத்தினை பகிர்ந்தார் இயற்கை விவசாயி சிவதேவன்.
Read more:
வேளாண் விஞ்ஞானிகள் நியமனத்தில் முறைகேடு செய்ததா ICAR?
பலத்த அடி வாங்கிய எண்ணெய் வித்து பயிர்கள்: ஆறுதல் அளித்த கோதுமை
Share your comments