எல்லா விவசாயிகளாலும் வேளாண் இயந்திரங்களையும், கருவிகளையும் வாங்க இயலாது. அதனை கருத்தில் வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் (Sub Mission on Agricultural Mechanization) கீழ் கொண்டு வேளாண் கருவிகளை வாங்க நினைக்கும் விவசாயிகளுக்கு முறையான வழிமுறைகளுடன் கூடிய மானியமும், அதை கொண்டு வியாபாரம் செய்யும் வகையில் வாடகை மையம் (Custom Hiring Centre on Agriculture implements) அமைப்பதற்காக அரசு மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய விவசாயிகளும் குறைந்த செலவில் வேளாண் கருவிகளைக் கொண்டு பயிர் நடவு மற்றும் அறுவடைக் காலங்களில் பயன் பெற முடியும்.
குழு & அமைப்புகளுக்கான - வாடகை மைய மானியம்
இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள், கிராமப்புற இளைஞா்கள் (தொழில் முனைவோா் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின்), விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், ஊராட்சி குழுக்கள் போன்றோா் வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்க 40 சதவீத (40 Percent Subsidy) மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் பிடித்தம் செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக் கணக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இரண்டு வருடங்களுக்கு பின் பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சரிபாா்த்த பிறகு மானிய இருப்புத் தொகை மீண்டும் வேளாண் இயந்திரங்கள் வாடகை மைய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது
கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல்
விவசாயிகள், கிராமபுர இளைஞர்கள் (தொழில் முனைவோர் சான்றிதழ் பெறப்பட்டிருப்பின்) விவசாய கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பஞ்சாயத்து குழுக்கள் போன்றோர் மூலம் ஒவ்வொன்றும் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் 40 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை) மானிய உதவியுடன் நிறுவப்பட்டு, கரும்பு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது.
மானிய விலையில் வாடகை மையம் அமைக்கும் விவசாயகளும் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கவேண்டியது அவசியம். இது தொடர்பான விவரங்களை தங்களது வருவாய் கோட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகி கூடுதல் விவரங்களை பெறலாம்.
சென்னை நந்தனத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை 044- 2951 5322, 2951 0822, 2951 0922 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை பெறலாம்.