தெற்கு ரயில்வே பிரிவில் சென்னை கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்களாக வேலை செய்யும் மூன்று நபர்கள் தலா 1 கோடிக்கு மேல் அபராதம் வசூலித்து சாதனை புரிந்துள்ளனர்.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமான நாடுகளில், பொதுமக்களின் போக்குவரத்திற்கு பெரும் பங்காற்றுவது ரயில் தான். பேருந்து, விமானம் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது நெடுந்தூர பயணத்திற்கு குறைந்த செலவில் சென்றுவிட முடியும். அதனால் பெரும்பாலான மக்கள் நெடுந்தூர பயணத்திற்கு ரயிலை தான் முதன்மை தேர்வாக கொண்டுள்ளனர்.
இந்திய ரயில்வே துறையின் கீழ் தெற்கு ரயில்வே செயல்படுகிறது. தெற்கு ரயில்வேயானது சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய ஆறு கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது. தெற்கு ரயில்வேயின் நிர்வாக பகுதிகளாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி திகழ்கிறது. எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படும் தெற்கு ரயில்வேயின் கீழ் செயல்படும் சென்னை ரயில் கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்களாக பணி புரிந்து வருபவர்கள் எஸ்.நந்தகுமார், ரோசலின் ஆரோக்கிய மேரி, சக்திவேல். இவர்கள் மூவரும் தான் இப்போது ஒரு கோடி கிளப்பில் இணைந்து தெற்கு ரயில்வேக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஒரு கோடி கிளப்:
மற்ற ரயில்வே கோட்டங்களை விட தெற்கு ரயில்வே கோட்டகத்தில் தான் பயணிகள் வருகை மூலம் அதிக வருவாய் ஈட்டப்படுகிறது. அந்தளவிற்கு பொதுமக்கள் நிரம்பி வழியும் நிலையில் மின்சார ரயில் உட்பட மற்ற ரயில்களிலும் டிக்கெட் எடுக்காமல் சட்ட விரோதமாக பயணிக்கும் பொதுமக்கள், முறையான லக்கேட்ஜ் கட்டணம் செலுத்தாத பயணிகள், மேலும் ரயில் நிலையங்களில் விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முறையற்ற பயணத்தை தடுக்கும் வகையில் தெற்கு ரயில்வேயானது “ஒரு கோடி கிளப்” என்கிற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியது. ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை இடைப்பட்ட காலத்தில் அதிகளவில் அபராதம் வசூலிக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் இந்த “ஒரு கோடி கிளப்பில்” சேர்க்கப்படுவார்கள்.
சென்னை கோட்டம்:
தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
சென்னை மண்டலத்தில் துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்தகுமார் 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.1.55 கோடி அபராதத் தொகையை வசூலித்துள்ளார். இதேபோல், தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கிய மேரி ரூ.1.03 கோடி அபராதத் தொகையை வசூலித்து, நாடு முழுவதிலும் உள்ள பெண் டிக்கெட் பரிசோதகர்களில் அதிக அளவு அபராதத் தொகையை வசூலித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மூத்த டிக்கெட் பரிசோதகர் சக்திவேல் ரூ.1.10 கோடி அபராதத் தொகை வசூலித்துள்ளார். இதன்மூலம், இவர்கள் மூவரும் ஒரு கோடி கிளப்பில் உறுப்பினர்களாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் கடின உழைப்பை பொதுமக்களும், நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மற்ற ரயில்வே கோட்டங்களில் வேலை செய்யும் ரயில்வே டிக்கெட் பரிசோதகர்களுக்கு இவர்கள் முன்னுதாரமாக திகழ்வதாகவும் தங்களது வாழ்த்துகளை சக பணியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காண்க:
தண்ணீர் பாய்ச்சுற கவலை இனி வேண்டாம்.. கல்லூரி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு