1. செய்திகள்

நெசவாளர்களின் துயர் துடைக்க வீதிகளில் கைத்தறி ஆடைகளை விற்றவர் அண்ணா- முதல்வர் நெகிழ்ச்சி

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Free power unit hike- Powerloom weavers thank CM MK stalin

கோவை கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் விசைத்தறிகளில் மின்னணு பலகைகள் பொருத்தும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட ஆணைகளை வழங்கினார்.

சமீபத்தில் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகினை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அந்த வகையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் விசைத்தறிகளில் மின்னணு பலகைகள் பொருத்தும் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு ஆணைகளை வழங்கி உரையாற்றினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்ட விவரங்கள் பின்வருமாறு-

” திராவிட முன்னேற்றக் கழகம் 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்திலேயே நெசவாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். கைத்தறி ஆடைகள் விற்காமல் தேங்கி இருந்தது. அவர்களுடைய துயர் துடைக்க, 1953-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் நாள் கைத்தறி ஆதரவு நாள் என்று கொண்டாடியது திராவிட முன்னேற்றக் கழகம். கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைப்பதற்காக அவர்களிடம் துணியைப் பெற்று – தோளில் தூக்கிச் சென்று தெருத்தெருவாக விற்றுக் கொடுத்த இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். கைத்தறித் துணிகளை வாங்க வேண்டும், கைத்தறி துணிகளை அனைவரும் அணிய வேண்டும் என்பதை இயக்கமாகவே ஆக்கிய இயக்கம் தி.மு.கழகம்.

திருச்சி வீதிகளில் பேரறிஞர் அண்ணா கைத்தறி ஆடைகளை சுமந்துகொண்டு விற்றுக் கொடுத்தார். கலைஞர் சென்னை வீதிகளில் விற்பனை செய்தார். கலைஞர் மட்டும் 20 ஆயிரம் ரூபாய்க்கு அன்றைக்கு விற்றுக் கொடுத்தார். ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 1950-களில் ஒரு லட்சம் ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை என்பது மூத்த தோழர்களுக்கெல்லாம் தெரியும். 10 கிராம் தங்கம் 99 ரூபாய் என்று இருந்த காலம் அது. கழகத்தினர் அனைவரும் கைத்தறி துணிகள்தான் அணிய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. கழகத்தின் இருவண்ணக் கொடி போட்ட வேட்டிகளும் சேலைகளும் அதன்பிறகு அதிகமாகத் தயார் ஆனது.

தஞ்சையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி வழங்க கழகம் முடிவெடுத்தது. கலைஞர், கைத்தறி துணிகளை வாங்கித்தான் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு அன்றைக்கு வழங்கினார். ஒரே நேரத்தில் இரண்டு நன்மைகள் நடந்தது, பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு துணி விற்பனையானது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் துணிகளை பெற்றுத் தந்தார்கள். அப்படி ஒரே நேரத்தில் இரண்டு நன்மைகள் செய்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

கழகம் எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் நெசவாளத் தொழிலுக்கு உதவி செய்யப்பட்டது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

  • காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சரிகை நிறுவனம் 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • ஈரோட்டில் தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலை 1973-இல் துவக்கப்பட்டது.
  • கூட்டுறவு கைத்தறி நெசவாளர்களுக்கான சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் 1975 முதல் செயல்படுத்தப்பட்டது.
  • நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம் முதன்முதலாக 1997 ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. மாதந்தோறும் ஓய்வூதியமாக 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 26,433 நெசவாளர்கள் இதனைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். 20 விழுக்காடு தள்ளுபடி 1998 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
  • உழவர்களுக்கு இருப்பதைப் போல கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் 2006-ஆம் ஆண்டு கழக அரசால் கொண்டுவரப்பட்டது.
  • நெசவாளர்கள் "ஹட்கோ" நிறுவனத்திடம் பெற்ற வீட்டுக் கடன் தொகை அனைத்தையும் 2008 ஆம் ஆண்டில் கழக அரசு தள்ளுபடி செய்தது.

இந்த வரிசையில்தான் இப்போது அமைந்துள்ள திராவிட மாடல் அரசானது பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு தொழில்கள் நசிந்து போயின. அதற்கு நெசவுத் தொழிலும் விதிவிலக்கு அல்ல. அடுத்து, நூல் விலை உயர்ந்தது. இந்த இரண்டு தாக்குதலில் நெசவாளர்கள் சிக்கியிருந்த நேரத்தில்தான் கழக அரசு ஆட்சிக்கு வந்தது. அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொடுத்து, இந்தத் தொழிலில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறோம். நெசவாளர் யாரும் வைக்காமலேயே ஏராளமான திட்டங்களை நிறைவேற்றித் கோரிக்கை தந்திருக்கிறோம்.

  • துணிநூல் துறைக்காகத் தனியாக ஆணையரகம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த, காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா புத்துயிர் பெற்றுள்ளது.
  • நெசவாளர் குறை தீர்க்கும் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • நெசவாளர் முத்ரா திட்டத்தின்கீழ் 24 ஆயிரத்து 684 பயனாளிகளுக்கு 120 கோடியே 80 லட்சம் ரூபாய் முத்ரா கடன்கள் வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது.
  • தஞ்சாவூர், கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் பயனடையும் வகையில், ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் நெசவுக் கூடம், பொது வசதி மையம், சாயச்சாலைகள் திறந்து வைக்கப்பட்டது.
  • 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணிபுரிந்து வந்த 406 தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
  • முதன்முறையாக எப்போதும் இல்லாத வகையில், அடிப்படைக் கூலியில் 10 விழுக்காடும், அகவிலைப்படியில் 10 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு இலட்சம் நெசவாளர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
  • நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1033 நிரந்தரப் பணியாளர்களுக்கு 15 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த நெசவாளர் விருதுகள், சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • கைத்தறி ஆதரவுத் திட்டத்தின்கீழ் 12 ஆயிரத்து 866 கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட ரூபாய் 60 கோடி செலவில் தறி உபகரணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • 757 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பெறும் காசுக்கடன் மீதான வட்டிச்சுமையை குறைக்கும் வகையில் ரூபாய் 25 கோடி வட்டி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் முதன்முறையாக ரூபாய் 30 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் International Standard Design and Incubation Centre (DICC) அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது.
  • சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சியகம் (Handlooms and Handicrafts Museum) அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
  • தமிழ்நாட்டின் கைத்தறி இரகங்களை அடுத்த தலைமுறையினருக்கு (Next Generation) கொண்டு செல்லும் வகையில் மின்னாக்கம் செய்து, ஆவணப்படுத்தும் பணிகள் ரூபாய் ஒரு கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
  • ஈரோட்டிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையிலுள்ள தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
  • 5,000 விசைத்தறிகளின் உற்பத்தி மற்றும் தரத்தினை மேம்படுத்த, ரூபாய் 12 கோடி செலவில் Electronic Panel Board நிறுவப்பட்டு வருகிறது.
  • வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்கீழ், 50 ஆயிரம் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. 1 கோடியே 78 லட்சம் சேலைகளும், 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் நடைபெற்று வருகிறது.
  • வேட்டி சேலை திட்டம் மற்றும் சீருடை வழங்கும் திட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு, நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான கூலி 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை ரூபாய் 4 கோடியே 40 லட்சம் அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
  • பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ், 42 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு சீருடைத் துணிகள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ளது.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகை ரூபாய் 4 இலட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தான், கைத்தறிக்கும் விசைத்தறிக்கும் மின் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கைத்தறி நெசவாளர்களுக்கு 100 அலகுகள் வரையிலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 அலகுகள் வரையிலும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை 2006-ஆம் ஆண்டு தொடங்கியதே கழக அரசுதான். அதில் இப்போது மாபெரும் சலுகையை அரசு அறிவித்திருக்கிறது. விலையில்லா மின்சாரம். கைத்தறி நெசவாளர்களுக்கு 200 அலகுகள் என்பது 300 அலகுகளாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 அலகுகள் என்பது 1000 அலகுகளாகவும் 3.03.2023 முதல் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 73 ஆயிரத்து 642 கைத்தறி நெசவாளர்களும், 1 லட்சத்து 68 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் பயனடையப் போகிறார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 53 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். ஆனால், இதை நாங்கள் செலவாக நினைக்கவில்லை. இந்தச் சலுகையை வழங்குவதன் மூலமாக, நெசவாளர்கள் புத்துயிர் பெறுவார்கள், அதிகமான உற்பத்திகள் செய்வார்கள். தமிழ்நாட்டில் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியதன் காரணமாக ஆறு தறிகள் மட்டும் வைத்து ஓட்டக்கூடிய ஏழை எளிய விசைத் தறியாளர்கள் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் இந்தத் தொழிலை செய்யக்கூடிய ஒரு அரிய நிலை இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

விசைத்தறிகளுக்கான மின் கட்டணத்தை 50 விழுக்காடு குறைத்து ஒரு யூனிட்டிற்கு 70 பைசா மட்டுமே எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு கணிசமான தொகை இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிச்சம் ஆகும்.

மேலும், இந்தத் தொழிலை வளர்ச்சி அடைய வைப்பதற்கான பெரும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள 24 லட்சத்து 6 ஆயிரம் விசைத்தறிகளில், நமது மாநிலத்தில் மட்டும் 5 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறிகள் இருக்கிறது. இதில் 10 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்” என குறிப்பிட்டார்.

மேலும் காண்க :

வேகமெடுக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்- தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு மருத்துவ முகாம்

சென்னையில் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்- யாரெல்லாம் பங்கேற்கலாம்?

English Summary: Free power unit hike- Powerloom weavers thank CM MK stalin Published on: 12 March 2023, 02:09 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.