தெரு நாயை அகற்றும் முயற்சியாக, காரில், கட்டி தெருநாயை ஒரு மருத்துவர் இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சில வேளைகளில் மனிதர்களிலும் மிருகத்தனம் வெளிப்பட்டு விடுகிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
காருக்கு வெளியே நாயை சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்ற மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் காரைத் தடுத்து நிறுத்திய மக்கள், நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் காரில் நாய் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் அதை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளார். போக்குவரத்து பரபரப்பு நிறைந்த சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
உயிருக்கு போராடிய நாய்
அந்த நாய் காருக்கு பின்னால் ஓட முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்ததை கண்ட விலங்கு நல ஆர்வலர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர்.
இளைஞரின் துணிவு
இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காரின் முன் தனது வாகனத்தை நிறுத்தி அந்த ஓட்டுநரை கட்டாயப்படுத்தி காரை நிறுத்தச் செய்கிறார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் அந்த நாயின் சங்கிலியை அவிழ்த்து விட்டு அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழக்கு பதிவு
தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில் அந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஒரு மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டின் அருகே இருந்த தெரு நாயை அகற்றும் நடவடிக்கையாக அதை காரில் கட்டி இழுத்து சென்றதாக அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். விலங்கு வதை சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இதயமற்ற அந்த மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!