தமிழகம் உட்பட ஏழு நிலையங்களில் எகானமி உணவுகளை (economy meals) தென்னக ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என ரயில்வே துறையினரால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் தங்களது நீண்ட தூர போக்குவரத்து சேவைக்கு, பெரும்பாலும் ரயிலில் தான் பயணிக்கிறார்கள். மற்ற போக்குவரத்து சேவைகளுடன் ஒப்பீடுகையில் ரயில் டிக்கெட் கட்டணம் மிகக்குறைவு என்பதும் ஒரு காரணம்.
இந்நிலையில் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை, விருதுநகர், நாகர்கோவில், திருவனந்தபுரம், மங்களூரு, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மலிவு விலையில் உணவு (economy meals) வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, பொது வகுப்பு பயணிகளுக்கு தரமான மலிவு விலையில் உணவு வழங்கும் முயற்சியில், தெற்கு ரயில்வே 7 ரயில் நிலையங்களில் புதிய சேவை கவுன்டர்களை வெள்ளிக்கிழமை திறந்துள்ளது. இந்த கவுண்டர்களில் ரூ.20 மற்றும் ரூ.50 என இரு விலைகளில் இரண்டு விதமான உணவு வகைகள் வழங்கப்படுகிறது.
என்ன உணவு வகை கிடைக்கும்?
முதல் வகை உணவில் ஏழு பூரிகள் (175 கிராம்), உருளைக்கிழங்கு குர்மா (150 கிராம்) மற்றும் ஊறுகாய் (12 கிராம்) இருக்கும். இரண்டாவது வகை உணவு வகையில் தென்னிந்திய அரிசி அல்லது ராஜ்மா/சோலே - அரிசி அல்லது கிச்சடி அல்லது குல்சே/பத்தூரே - சோல் அல்லது பாவ்-பாஜி அல்லது மசாலா தோசை என பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த உணவு வழங்கும் ஸ்டால்கள் ரயில்வே பிளாட்பாரங்களில் பொது பெட்டிகளுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளன. தரத்தை உறுதி செய்வதற்காக, இந்த ஏழு நிலையங்களில் அமைந்துள்ள IRCTC சமையலறை அலகுகளில் இருந்து உணவு வழங்கப்படும். இத்திட்டத்தை IRCTC ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தும்.
மேலும் 200 ml பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலும் விற்க திட்டமிட்டுள்ளது. அதற்கான வேலைகள் முழுமையாக நிறைவடையும் வரை, ஒரு லிட்டர் பாட்டில்கள் விற்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த சேவைகள் படிப்படியாக மற்ற ரயில்வே நிலையங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்றால், ரெயில்மடாட் போர்ட்டலில் (Railmadad portal) ஆன்லைன் மூலமாக தங்களது புகார்களை பதிவு செய்யலாம். மலிவு விலையில் உணவு மற்றும் தண்ணீர் வசதியை வழங்கும் இந்த சேவை ஏற்கனவே 51 நிலையங்களில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவையை நீட்டிக்க புதிய ரயில் நிலையங்களை அடையாளம் காணும் பணி தற்போது நடந்து வருகிறது. மலிவு விலையில் உணவு வழங்கும் சேவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் காண்க:
கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை இரகம்- விசைத்தறி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை