கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விளைநிலத்தில், யானை ஒன்று மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கண்டியூர் பீட் என்னும் இடம் உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான விளை நிலத்தில் வியாழக்கிழமை காலை, யானை ஒன்று பலத்த காயங்களுடன் இறந்து கிடைந்ததை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தனர்.
சுட்டுக்கொல்லபட்ட யானை (Elephant found shot dead)
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில், யானை சுமார் 25 வயது மதிக்கத்தக்கது என்பதும், அதன் இடது காது பகுதியில் காயத்துடன் ரத்தம் வழிந்திருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், யானை சுட்டுக்கொல்லபட்டதாக (Elephant shot dead) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,போலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டியூர் பீட்டிற்கு அருகே உள்ள சிறுமுகையில் சமீபத்தில் இரண்டு யானைகள், அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், தற்போது ஒரு யானை சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, வனத்துறையினரிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் விசாரனை (Forest officials investigate)
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், எதற்காக யானைக் கொல்லப்பட்டது? என்பது குறித்த மேலும் பல்வேறு தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில், வனவிலங்குகளை கொடுமைப்படுத்தும் கும்பல் பதுங்கியுள்ளதா? என்றக் கோணத்திலும், விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளது.
கடந்த மாதம் கேரளாவின் பாலக்காடு பகுதியில் கர்ப்பமாக இருந்த பெண் யானை ஒன்று உயிரிழந்தது. பட்டாசுகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தினை உண்டதால் யானையின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சில நாட்கள் உணவு உண்ணாமல் தவித்து வந்த யானை ஒரு ஆற்றில் இறங்கி நின்று கொண்டே உயிரிழந்தது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
டெல்டா குறுவை சாகுபடியில் தமிழகம் இந்த ஆண்டு சாதனை படைக்கும் - ககன்தீப் சிங் பேடி!
ஆரோக்கியம் முதல் அழகு வரை அனைத்திற்கும் தேன்!!