1. விவசாய தகவல்கள்

டெல்டா குறுவை சாகுபடியில் தமிழகம் இந்த ஆண்டு சாதனை படைக்கும் - ககன்தீப் சிங் பேடி!

Daisy Rose Mary
Daisy Rose Mary

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பயிர் விளைச்சலில் தமிழகம் சாதனை படைக்கும் என வேளாண் உற்பத்தி ஆணையரும், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 43.42 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 36 சதவீதமான 15.89 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு டெல்டா மாவட்டங்களில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடி ஜூன், ஜூலை மாதங்களிலும், சம்பா சாகுபடி ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும், தாளடி சாகுபடி அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் பயிரிடப்படுகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும், கடலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறுவை சாகுபடி காவிரி நீரையே நம்பியுள்ளது. பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டு வருகிறது.

உரிய நேரத்தில் திறக்கப்பட்ட மேடூர் அணை (Mettur Dam)

கடந்த 8 ஆண்டு கால இடைவெளியில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கும் மேலாக, 90 நாட்களைக் கடந்து நீடிக்கிறது. போதுமான அளவில் நீர் இருப்பு உள்ளதைக் அறிந்த அரசு, நீர் திறப்பு தேதியை முன்கூட்டியே அறிவித்தது. இதனால், ஆற்றுக் கால்வாய்களில் நீர் வருவதற்கு முன்பே நாற்றங்கால் மற்றும் நடவுப் பணியில் விவசாயிகள் ஈடுபட வசதி வாய்ப்பு கிடைத்தது.

கடந்த ஜூன் 12-ந் தேதியன்று மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார். டெல்டா பகுதியில் இந்த குறுவை காலகட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கரில் 6.07 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்ய வேளாண்மைத் துறை திட்டமிட்டுள்ளது.

முன் குறிக்கப்பட்ட தேதியில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு இருப்பதால், இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட பகுதியில் தண்ணீர் வசதி கிடைக்கப்பெற்று குறுவை காலத்தில் அரிசி உற்பத்தியில் சாதனை படைக்கப்படும்.

விதைநெல், உரம் கையிருப்பு (Seeds & Fertilizer)

3,796 டன் குறுகிய கால விதை நெல் சிஓ 51, ஏடிடி 43, 45, 36, 37, ஏஎஸ்டி 16, டிகேஎம் 9 மற்றும் ஐ.ஆர்.50 ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2,131 டன் விதை நெல், வழங்குவதற்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன.

ஜூன் மாதத்திற்கு 37,450 டன் உரம் தேவைப்படுகிறது. தற்போது ஒரு லட்சத்து ஆயிரத்து 40 டன் உரம் (யூரியா27,500 டன், டிஏபி 19,240 டன், பொட்டாஷ்-13,910 டன், காம்ப்ளக்ஸ் - 35,870 டன், எஸ்.எஸ்.பி. 4,470 டன்) டெல்டா மாவட்டங்களில் கைவசம் உள்ளன.

டிராக்டர் எந்திரங்கள் தயார் நிலை (Tractors)

அதோடு, டிராக்டர் நாற்று நடும் எந்திரங்கள், தெளிப்பான், உரக்கலவை எந்திரம் போன்ற வேளாண் எந்திரங்கள் பயன்பாட்டுக்கு ஏதுவாக தேவையான அளவில் உள்ளன. அவை வேளாண் விரிவாக்க மையங்கள், தனியார் கடைகளில் வைக்கப்பட்டுள்ளன.

குறுகிய காலம் மற்றும் உப்பு சகிப்பு கொண்ட வகைகளான டிகேஎம்-9, ஏடிடி-45 போன்றவற்றை கடைமடைப் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பு அறுவடை செய்யும் வகையிலான விதைப்பு முறைகளை பின்பற்றவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ககன்தீப்சிங் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி ஆய்வு!

தமிழகத்தில் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு கம்மி விலையில் வீடுகளை வழங்க உலக வங்கியுடன் ஒப்பந்தம்!

109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் – ரயில்வே அமைச்சகம் அழைப்பு!!

English Summary: Tamil Nadu's Delta kuruvai paddy Cultivation will hit success in this season - gagandeep singh bedi Published on: 02 July 2020, 04:56 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.