வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அவ்வாறு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெறுவது எப்படி, தவறான தகவல் வழங்கி பெற்றால் என்ன தண்டனை என்பதனை இங்கு காணலாம்.
மனுதாரர் தான் வசித்து வரும் இருப்பிடத்திற்கு உட்பட்ட வட்டாட்சியரிடம் பொது இ-சேவை மையத்தின் மூலம் முதல் தலைமுறை பட்டதாரி சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் யார்?
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தைச் சார்ந்த முதல் மாணவ/ மாணவியர். வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முன்னுரிமை பெறுவோர்.
குடும்பம்: முதல் பட்டதாரி சான்று பெற குடும்ப நபர்கள் என்பது சம்மந்தப்பட்ட குடும்பத்திலுள்ள தந்தை, தாய் அவர்களின் பெற்றோர் மற்றும் மாணவன் / மாணவியின் உடன்பிறப்புகளைக் குறிக்கும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:-
- புகைப்படம்
- முகவரிக்கான சான்று
- மனுதாரரின் மாற்றுச் சான்றிதழ் / வேலைவாய்ப்பு அட்டை(கல்விக் கட்டண சலுகைக்காக/வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிப்போர்)
- மனுதாரர் மற்றும் பெற்றோரின் உறுதிமொழி படிவம்
- பெற்றோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ்
- குடும்ப அட்டை
- மனுதாரரின் கல்விச் சான்றிதழ்கள்
முதல் தலைமுறை பட்டதாரி சான்று வழங்கும் நடைமுறை:
- மனுதாரர் மேற்படி ஆவணங்களுடன் பொது இ-சேவை மையத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
- மேற்படி விண்ணப்பம் கிராம நிருவாக அலுவலர் விசாரணைக்குப்பின் வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படும்.
- கிராம நிருவாக அலுவலர் / வருவாய் ஆய்வாளர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்தும், கள விசாரணை மேற்கொண்டும் விண்ணப்பத்தினை ஏற்கவோ / திருப்பியனுப்பவோ / நிராகரிக்கவோ தகுந்த காரணங்களுடன் மண்டல துணை வட்டாட்சியருக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- வருவாய் ஆய்வாளரின் அறிக்கை கிடைக்கப் பெற்ற ஒரு வார காலத்திற்குள் மண்டல துணை வட்டாட்சியர் சான்று வழங்கிட வேண்டும்.
- மனுதாரர் முதல் தலைமுறை பட்டதாரி சான்றினை குறுஞ்செய்தி வரப்பெற்றவுடன் இணையவழியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தவறான தகவல் அளித்தால் என்ன தண்டனை?
தவறான தகவல் அளித்து கல்வி கட்டண சலுகை பெற்ற மாணவ / மாணவியர் மீதும் மற்றும் அதே போன்று முதல் தலைமுறை பட்டதாரி சான்று பெற்று அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றிருப்பவரின் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை மூன்று மடங்காக சம்மந்தப்பட்ட மாணவர்களிடமிருந்தோ அல்லது அவரது பெற்றோரிடமிருந்தோ வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கலாம் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்று பெற்று அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற்றிருப்பவரின் மொத்த முழு ஊதியத்தையும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் திரும்ப வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான உறுதிமொழி அல்லது தவறான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் தலைமுறை பட்டாதாரி சான்றிதழ் பெறப்பட்டதாக பின்னர் தெரிய வந்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் வட்டாட்சியரால் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
அண்ணனுக்கு முன்னாடி தம்பி டிகிரி முடித்தால் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்?