திருமணம் ஆகாத நபர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளதாக ஹரியானா முதல்வர் அறிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
80’ஸ் கிட்ஸ்களுக்கும், 2கே கிட்ஸ்களுக்கும் இடைப்பட்ட 90’ஸ் கிட்ஸ்களின் நிலைமை தான் மிகவும் பரிதாபம். தற்போது வரை 90’ஸ் கிட்ஸ்களில் ஒருவருக்கு கல்யாணம் என்றால் ஊரே ஆச்சரியப்பட்டு போகும். குடும்ப பாரம், காதல் தோல்வி என பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவே சிக்கிய 90’ஸ் கிட்ஸ்களில் இன்று வரை பலருக்கும் திருமணம் ஆகவில்லை என்பது தான் நிதர்சனம்.
இப்படியிருக்கையில் தான், ஒரு மாநிலத்தின் முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. கர்னாலில் உள்ள கலம்புரா கிராமத்தில் நடந்த 'ஜன் சம்வத்' நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பங்கேற்று பல்வேறு அரசின் திட்டங்களை குறித்து எடுத்துரைத்தார்.
ஹரியானா அரசு ஏற்கனவே மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், குள்ளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் வழங்கி வருகிறது. ஹரியானா மாநிலத்தில் முதியோர் ஓய்வூதியத்தை அடுத்த 6 மாதங்களுக்குள், மாதம் ரூபாய் 3000 ஆக உயர்த்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நிகழ்வில் தெரிவித்துள்ளார். இதைவிட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பிரம்மச்சாரிகளுக்கான ஓய்வூதிய திட்டம் தான்.
ஹரியானா மாநிலத்தில் 45-60 வயதுக்குட்பட்ட திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை விரைவில் தொடங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
'ஜன் சம்வாத்' நிகழ்ச்சியில் 60 வயது திருமணமாகாத ஒருவர், தனக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி கோரிக்கை மனு ஒன்றினை முதல்வருக்கு வழங்கினார். இதனடிப்படையில் தான் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
ஒருவேளை இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்தியா முழுவதும் பேசுப்பொருள் ஆவதோடு இதனை மற்ற மாநிலங்களும் அமல்படுத்த கோரிக்கை எழும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நிகழ்வில் முதல்வர் அறிவித்த சில அறிவிப்புகள் பின்வருமாறு-
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய இணைப்பு வழங்குமாறு கர்னல் துணை ஆணையருக்கு முதல்வர் உத்தரவிட்டார். "இன்றைய காலகட்டத்தில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை ஆன்லைன் மூலமாக வேலைகள் நடைபெறுவதால் கிராமங்களில் இன்டர்நெட் சேவை அவசியம்.
கிராமம்தோறும் பிஎஸ்என்எல் இணையதள சேவை கிடைக்கும் முதல் மாவட்டமாக கர்ணால் விளங்கும்" என்றார் முதல்வர். மேலும் கட்டார் சமுதாயக்கூட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டிய முதல்வர் கலம்புரா கிராமத்தில் சமஸ்கிருதி மாதிரி பள்ளி கட்டப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் காண்க: