இன்று காலை குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீரினை திறந்து வைத்து, நடப்பாண்டிற்கான குறுவை நெல் சாகுபடி திட்டத்தையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையின் 90 ஆண்டுக்கால வரலாற்றில் குறிப்பாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது இது 19-வது முறையாகும். கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும் டெல்டா பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகளுக்கு 90 கோடி ரூபாயினை அரசு ஒதுக்கியுள்ளது. பெரும்பான்மையான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், ரூபாய் 75 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டிலான குறுவை நெல் சாகுபடி திட்டத்தினையும் முதல்வர் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தாண்டும் குறுவை சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகங்கள், அவற்றிற்கான உரமிடுதல் தன்மை ஆகியவற்றினை கிரிஷி ஜாக்ரானுடன் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு-
குறுவை சாகுபடிகேற்ற நெல் ரகங்கள் தேர்வு:
பொதுவாக குறைந்த நாளில் அதிக விளைச்சல் தரக்கூடிய மற்றும் நோய் / பூச்சி எதிர்ப்புதிறன் உடைய நெல் இரகங்களை தேர்வு செய்வது அவசியம். எடுத்துக்காட்டாக ஆடுதுறை நெல் ரகங்களான 36,37,43,45,53 மற்றும் அம்பை 16, திருப்பதி சாரம் 5 மற்றும் கோ 50,51 இவற்றில் எதாவது ஓன்றை தேர்வு செய்யலாம்.
உரமிடுதலின் அளவு:
மண்பரிசோதனை படி உரமிடுதல் வேண்டும். இல்லாத பட்சத்தில் பொது பரிந்துரைப்படி (50:20:20)- (N: P: K) என்ற அளவில் ஏக்கருக்கு இடலாம். நன்றாக உழுதப்பின் மக்கிய தொழுஎரு 5டன்/ பசுந்தாள் உரம் (இலைதழைகள் தக்கைபூடு) 2.5 டன் இட வேண்டும். கடைசி உழவில் 5 கிலோ நுண்ணூட்ட சத்து 10 கிலோ மணலுடன் கலந்து தூவி விடலாம்.
நாற்றுகளை குறிப்பிட்ட இடவெளியில் நட்டு 10 அடிக்கு 1 அடி இடைவெளிவிட்டு பட்டம் விட்டு நட வேண்டும். தழைச்சத்தை 3 தவணைகளில் பிரித்து அதாவது 15,30,45-வது நாளில் இட வேண்டும். இடும்போது 5:4:1 என்ற அளவில் யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டும். இவ்வாறாக இடுவதால் யூரியாவில் உள்ள தழைச்சத்தை உடனடியாக கிரகிக்க பட்டு நெல் பூக்கள் நன்றாக மலர்ந்து கருவுற்று அதிக எடையுடன் கூடிய நெல் மணிகள் உருவாகி நல்ல விளைச்சலுக்கு வழி வகுக்கும். சாம்பல் சத்தை அடியுரமாக பாதியும் மேலுரமாக இரண்டாம் களை எடுத்தபின் இடலாம்.
களைக்கொல்லியானது நடவு நட்ட3-5 நாளில் இடலாம். நீர்ப்பாசனம் பயிரின் தேவைக்கேற்ப இட வேண்டும், அதாவது காய்ச்சலும் பாய்ச்சாலுமாக இருக்க வேண்டும். நான்கு முக்கிய கட்டங்களில் நீர் பாசனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். (தூர்பிடிக்கும் பருவம், பூக்கும் பருவம், கதிர் உருவாகும் பருவம், பால் பிடிக்கும் பருவம்)
பயிர்பாதுகாப்பு முறை:
தேவைக்கேற்ப ஓருங்கிணந்த முறையில் கையாள வேண்டும். இவ்வாறாக செய்தாலே குறுவையில் நாம் எதிர்பார்த்த விளைச்சல் (மகசூல்) கிடைக்கும்.
இந்தாண்டு நடவு பருவத்திலே நெல்பயிருக்கான குறைந்த பட்ச ஆதார விலையினை (MSP) ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பருவத்திலிருந்து நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையில் கொள்முதல் செய்யப்படும் என்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என தமிழக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி குறித்த மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்க.
அக்ரி சு.சந்திர சேகரன், (வேளாண் ஆலோசகர்), அருப்புக்கோட்டை, அலைபேசி எண்: 9443570289
மேலும் காண்க:
மேட்டூர் அணை: குறுவை, சம்பா, தாளடி பாசனத்திற்கு எவ்வளவு நீர் திறக்கப்படும்?