விவசாயிடம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட மத்தியப் பிரதேச வருவாய்த்துறை அதிகாரி ரூ.4500 பணத்தை வாயில் போட்டு மென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் கடானி பகுதியில் அரசு அதிகாரி ஒருவர், திங்கள் கிழமையன்று லஞ்சமாக வாங்கிய கரன்சி நோட்டுகளை ஜபல்பூர் லோக்ஆயுக்தாவின் சிறப்பு காவல் துறையின் (SPE) குழுவால் கையும் களவுமாக பிடிபட்டதால் வாயில் போட்டு மென்றார்.
இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்டு அசராமல் வாயில் போட்ட பணத்தை எடுக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் தான் இன்றைய ஹாட் டாபிக்.
அந்த அரசு அதிகாரியின் பெயர் கஜேந்திர சிங். இவர் மத்தியப் பிரதேசத்தின் கடானி மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடய விவசாய நிலத்திற்கு உரிமை மாற்றம் தொடர்பாக கஜேந்திர சிங்கினை அணுகியுள்ளார் விவசாயி சந்தன் சிங் லோதி என்பவர்.
மேற்கொண்டு கடமையை செய்ய ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த விவசாயி லோதி லோக்ஆயுக்தா (லஞ்ச ஒழிப்புத்துறை) ஜபல்பூரில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ.4500 பணத்தை விவசாயிடம் கொடுத்தனர் காவலர்கள்.
ஸ்கெட்ச் கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல், விவசாயி ரசாயனம் தடவிய பணத்தை வழங்க வருவாய்த்துறை அதிகாரி கஜேந்திர சிங்கும் அந்த பணத்தை வாங்கியுள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். என்ன நடக்கிறது என்பதை உணர்ந்த அதிகாரி, உடனே கையிலிருந்த பணத்தை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். அதிகாரியின் செயலை கண்டு அதிர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் விழுங்கிய பணத்தை சக்கையாக வெளியே எடுக்க வைத்தனர். இதுத் தொடர்பான காட்சிகள் தான் இணையத்தில் தீயாக பரவியது.
இச்சம்பவம் குறித்து SPE காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் சாஹு கூறுகையில் "பர்கேடா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், சிங் லஞ்சம் பெறுவதாகக் கூறி எங்களிடம் புகார் செய்தார். அவர் பணத்தைப் பெற்ற போது, கையும் களவுமாக அவரை கைது செய்ய முயன்றோம். இதனால் அந்த வருவாய்த்துறை அதிகாரி தன்னிடமிருந்த லஞ்ச பணத்தை விழுங்கினார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அந்த பணத்தை வெளியே எடுத்துள்ளோம். தற்போது அவர் நலமாக இருப்பதாகக் கூறினார்."
மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் எஸ்பி தெரிவித்துள்ளார். இணைய வாசிகளுக்கு இதுப்போதாதா? அதிகாரி பணத்தை வெளியே எடுக்கும் காட்சியினை பகிர்ந்து மூணு வேளையும் பணத்தை சாப்பிடுவாரு போல என பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் காண்க:
மாநிலம் வாரியாக ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை?