மானியத்தில் வேளாண் கருவி வாங்குவதில் புதிய மாற்றம்- அமைச்சர் அறிவிப்பு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Good news for Tamilnadu farmers New change in subsidy agri equipment

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் பெருமளவில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மானியம் விலையில் வேளாண் இயந்திரம் வழங்குவதில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் வேளாண்மை நிதி நிலை அறிக்கை 2023-2024-இல் அறிவித்தபடி சிறு, குறு விவசாயிகள் சிறிய வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுப் பயன்பெறும் நோக்கத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராம விவசாயிகளுக்கு 5,000 பவர் டில்லர்கள் / விசைக் களையெடுப்பான் கருவிகளை மானியத்தில் வழங்க இலக்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு "உழவன் செயலி' வாயிலாக இணைய வழியில் (ஆன்லைனில்) பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதுவரை உள்ள நடைமுறையில், விவசாயிகள் மானியத்தில் வேளாண் இயந்திரங்களை பெறுவதற்கு, வேளாண் இயந்திரங்களுக்கான முழுத் தொகை அதாவது, மானியத் தொகையையும், விவசாயிகளின் பங்களிப்புத் தொகையினையும் சேர்த்து செலுத்தி, இயந்திரங்களை வாங்கிய பின்பு மானியமானது விவசாயிகளுக்கு பின்னேற்பு முறையில் வழங்கப்பட்டு வந்தது. மேலும், இந்த மொத்தத் தொகையினை வங்கிகளில் கடனாக பெறுவதில், வங்கிகளில் உள்ள சிக்கலான நடைமுறைகளினால் காலதாமதம் ஏற்படுகிறது. வங்கிக்கடன் பெற்ற பின், மானியத்திற்கும் சேர்த்து விவசாயிகள் வட்டித் தொகையினை செலுத்த வேண்டி இருந்தது.

சிறு, குறு விவசாயிகள் வேளாண் இயந்திரங்களுக்காகும் மொத்தத் தொகையினை திரட்டுவதற்கு காலதாமதமாகும் நிலையில், வசதி குறைந்த ஏழை எளிய விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறுவது அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

எனவே, தற்போதுள்ள நடைமுறை மாற்றப்பட்டு, விவசாயிகள் தங்களின் பங்களிப்புத் தொகையை மட்டும் (அதாவது இயந்திரங்களுக்கான மொத்த தொகையிலிருந்து மானியத் தொகையை கழித்து மீதமுள்ள தொகை) நேரடியாக வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அல்லது விநியோகஸ்தர்களுக்கு அல்லது முகவர்களுக்கு செலுத்தினால் போதும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறு, குறு விவசாயிகள், அதிக எண்ணிக்கையில் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் பயனடைவதோடு, வேளாண் இயந்திரமயமாக்குதலின் முழுமையான நோக்கமும் ஏற்றத்தாழ்வின்றி, நிறைவேறும். அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் இத்திட்டத்தின் பலன்கள் சென்றடைந்து வேளாண் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் இத்திட்டத்தில், சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர், பெண் விவசாயிகள் ஆகியோர் பவர்டில்லர்கள் வாங்கிட 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்ச மானியத் தொகையான ரூ.85,000/-மும், விசைக்களையெடுப்பான்கள் வாங்கிட அதிகபட்ச மானியத் தொகையான ரூ.63,000/-மும் மற்றும் இதர விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் வாங்கிட 40 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்ச மானியத் தொகையான ரூ.70,000/-மும், விசைக் களையெடுப்பான்கள் வாங்கிட அதிகபட்ச மானியத் தொகையான ரூ.50,000/-மும் கழித்து, மீதமுள்ள தங்களின் பங்களிப்புத் தொகையினை விவசாயிகள் இணையவழியிலோ (RTGS/NEFT) அல்லது வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது விநியோகஸ்தர் அல்லது முகவருக்குச் செலுத்தி பவர்டில்லர் அல்லது விசைக்களையெடுப்பான் இயந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.

Read also: சம்பளத் தாரர்களுக்கு நற்செய்தி- PF வட்டி விகிதம் உயர்வு

மேலும், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த சிறு, குறு, விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையினைக் குறைத்து, அவர்களுக்கு உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன், 20 சதவீத கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இதன்படி பவர்டில்லருக்கு அதிகபட்சமாக ரூ.34,000/-மும்,  விசைக்களையெடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ. 25,200/-ம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, ஆதி திராவிடர், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகள் பவர்டில்லர் மற்றும் விசைகளையெடுப்பான் வாங்கிட அதிகபட்ச மானியமான முறையே ரூ.1,19,000/- மற்றும் ரூ.88,200/-ம் இதனைக் கழித்து மீதமுள்ள, தங்களின் பங்களிப்புத் தொகையினை விவசாயிகள் இணைய வழியாகவோ (RTGS/NEFT)அல்லது வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ, அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவர்டில்லர் மற்றும் விசைக்களையெடுப்பான் இயந்திரத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.

உழவன் செயலியில் - "வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு" என்ற சேவையில் "வேளாண்மைப் பொறியியல் துறை மானியத் திட்டங்கள்" என்ற பிரிவில் தங்கள் விவரங்களை இணைய வழியில் (ஆன்லைனில்) பதிவு செய்து மானியத்தில் பவர் டில்லர் / விசை களையெடுப்பான் வாங்கிப் பயன்பெறுமாறு வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

மகளிருக்கான ரூ.1000- விண்ணப்பம் ஏற்கப்பட்டால் மெசேஜ் வருமா?

மாநிலம் வாரியாக ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை?

English Summary: Good news for Tamilnadu farmers New change in subsidy agri equipment Published on: 25 July 2023, 10:52 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.