அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் தலைமை ஆசிரியரின் புதுமைத் திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்பட வில்லை.
பள்ளிகள் திறப்பு (Opening of schools)
தொற்றுப் பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு (School Education Order)
இந்நிலையில், ஜூன் 14-ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாட புத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாக பணிகளை தலைமை ஆசிரியர்களை கொண்டு நடத்த வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுட்டது.
மாணவர் சேர்க்கை (Student Admission)
இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2021-22 கல்வி ஆண்டுக்கான 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைத் தொடங்கியது.
ரூ.1,000 பரிசு (Rs.1,000 prize)
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், இந்த பள்ளியில் புதிதாகச் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தனது சொந்த செலவில் ரூ.1000 வழங்கி வருகிறார். அவரது இந்த முயற்சிக்கு அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது.
மாணவர்களுக்கு செல்போன் (Cell phone for students)
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு இந்த பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு செல்போன்களை தலைமை ஆசிரியர் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சலுகைகள் (Various offers)
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், அரசு பள்ளியில் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
மகிழ்ச்சி அளிக்கிறது (Gives pleasure)
அரசு சலுகைகள் வழங்கி வரும் நிலையில் தன்னால் முடிந்த விஷயங்களை செய்து பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். கடந்த ஆண்டு செல்போன் கொடுத்த நிலையில் தற்போது ரூ.1000 கொடுத்து வருவதாகவும், இதனால் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாவதால் இதனை தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறினார்.
வியப்பு (Surprise)
தலைமையாசிரியரின் இந்த செயல் சுற்றுவட்டார கிராம மக்களிடையே மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
தனியார் மோகம் தீரும் (Private lust will be solved)
இவரைபோல் சமூக மேம்பாடு செய்யத் துடிக்கும் அரசு ஆசிரியர்கள் தங்களால் இயன்ற உதவிகளை மாணவர்களுக்கு செய்தால் இன்னும் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க 8 பள்ளிகள் ஒப்படைப்பு- ஈஷா நடவடிக்கை!