இந்தியாவில் கோடை வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், பள்ளி- கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுக்க குடும்பத்தோடு பலர் கிளம்பிவிட்டனர். இந்தியா பன்முக நிலப்பரப்பை கொண்ட நாடாக விளங்கும் நிலையில், உங்கள் கோடை சுற்றுப்பயணத்துக்கு ஏற்ற சிறந்த 10 இடங்களை இங்கு காணலாம்.
1.லே-லடாக்: இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள லே-லடாக் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கான சொர்க்கமாகும். அழகிய நிலப்பரப்புகள், பனி மூடிய மலைகள், மற்றும் தெளிவான ஏரிகள் ஆகியவை வெப்பத்தில் இருந்து உங்களை விடுவிக்க சிறந்த சுற்றுலாத் தலமாகும்.
2.டார்ஜிலிங்: இமயமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் டார்ஜிலிங், இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்கள், குளிர்ந்த காலநிலை மற்றும் கஞ்சன்ஜங்கா மலைத் தொடரின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்குப் பெயர் பெற்றது. டார்ஜிலிங் ஹிமாலயன் ரயில்வே யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
3.சிம்லா: வட இந்தியாவில் பிரபலமான கோடைகால இடமான சிம்லா அதன் காலனித்துவ கட்டிடக்கலை, இயற்கை அழகு மற்றும் குளிர்ச்சியான வானிலைக்காகவே இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது அருகிலுள்ள குஃப்ரி (Kufri) மற்றும் சைல் (Chail)மலை வாசஸ்தலங்களுக்கு நுழைவு வாயிலாகவும் உள்ளது.
4.முசோரி: "மலைவாசஸ்தலங்களின் ராணி" என்று அழைக்கப்படும் முசோரி, வட மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகான மலைவாசஸ்தலம் ஆகும். அதன் பசுமையான மலைகள், அருவிகள், மற்றும் இயற்கை காட்சிகள் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சரியான இடமாக கருதப்படுகிறது.
5.ஊட்டி: தென் மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஊட்டியானது மலைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் அழகிய ஏரிகளுக்கு பெயர் பெற்ற தமிழகத்தின் பிரபலமான கோடைகால ஓய்வு இடமாகும். யுனெஸ்கோவின் மற்றொரு உலக பாரம்பரிய தளமாக நீலகிரி மலை இரயில்வே உள்ளது. நீலகிரி பக்கம் போனால் இதை மிஸ் பண்ணிடாதீங்க.
6.மூணார்: தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மூணார். பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், மூடுபனி மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்ற இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலம் ஆகும். அழிந்து வரும் நீலகிரி தாருக்கு பெயர் பெற்ற இரவிகுளம் தேசியப் பூங்காவும் இங்குதான் உள்ளது.
7.கோவா: பெயரே சொன்னாலே சும்மா அதிரும் என்பார்களே, அப்படி ஒரு ஊர் தான் கோவா. இளசுகள் சுற்றிப்பார்க்க விரும்பும் பட்டியலில் கோவாவிற்கு எப்பவும் தனி இடம் இருக்கும். மணல் நிறைந்த கடற்கரைகள், விழாக்கோலமாக இருக்கும் இரவு நேரம் மற்றும் கடல் உணவுகளுக்கும் பெயர் பெற்றது கோவா. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் படையெடுக்கும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று. இந்த மாநிலத்தில் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன.
8.கூர்க்: தென் மாநிலமான கர்நாடகாவில் அமைந்துள்ள கூர்க், காபி தோட்டங்கள், மூடுபனி மலைகள் மற்றும் கொட்டும் அருவிகளால் இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலமாக திகழ்கிறது. மலையேற்றம் மற்றும் வனவிலங்கு காண சஃபாரி போன்றவற்றினால் இது ஒரு பிரபலமான இடமாகும்.
9.கொடைக்கானல்: தென் தமிழகத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் அமைதியான ஏரிகள், மலைகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்ற அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். சைக்கிள் ஓட்டுவதற்கும், படகு சவாரி செய்வதற்கும் இது ஒரு பிரபலமான இடமாகும்.
10. ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை மற்றும் பரபரப்பாக இயங்கும் பஜார்களுக்கு பெயர் பெற்றது. புகழ்பெற்ற அம்பர் கோட்டை மற்றும் ஹவா மஹால் உட்பட பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் இங்கு உள்ளன.
இந்தியாவின் நிலப்பரப்பை பன்முகத்தன்மையில் சிறந்து விளங்கும் நிலையில், உங்களது கோடை விடுமுறையை இன்பமாய் கழித்திட இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலத்தையோ, அழகிய கடற்கரையையோ அல்லது கலாச்சார அனுபவத்தையோ தேடிச் செல்லுங்கள்.
photo courtesy: pexels
மேலும் காண்க: