நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், பல்வேறு திட்டங்களை, கோவை மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தி வருகிறது. சுயதொழில் துவங்குவதற்கு மூன்று பிரதான சுயதொழில் கடன் திட்டங்கள் (Self employment loan scheme) இங்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுயதொழில் செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள், இந்த மூன்று திட்டங்களைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையில் வெற்றிப் பயணத்தை தொடரலாம்.
'நீட்ஸ்'
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் (NEEDS), தமிழகத்தில் வசிக்கும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள், 21 முதல், 45 வயது வரை சிறப்பு பிரிவினர் (பொது பிரிவினருக்கு, 35 வயது வரை) உள்ளவர்கள் இதற்கு தகுதியானவர்கள். திட்டத்தில், 5 கோடி ரூபாய் வரை உற்பத்தி (மத்திய, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் சிவப்பு பிரிவு என வகைப்படுத்தப்பட்டவை தவிர) சேவை தொழில்கள் (டாக்சி, சாதாரண சரக்கு போக்குவரத்து மற்றும் சில வகைகள் தவிர்த்து) ஆரம்பிக்கலாம். இதில், 25 சதவீதம் மானியம் (Subsidy) அதிகபட்சமாக, 50 லட்சம் வரை நிலம், கட்டடம், இயந்திரங்களுக்கு கிடைக்கும். 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் உண்டு.
'உய்ஜிப்'
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (உய்ஜிப்), ஓர் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் வசிக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல், 45 வயது வரையுள்ள சிறப்பு பிரிவினர் (பொதுப்பிரிவினர், 35 வயது வரை), குடும்ப ஆண்டு வருமானம் (Annual Income), 5 லட்சத்துக்கு மிகமால் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வியாபாரம் மற்றும் சேவை தொழிலுக்கு, 5 லட்சம் வரையும், உற்பத்தி (Production) தொழிலுக்கு, 15 லட்சம் வரையும் விண்ணப்பிக்கலாம்; 25 சதவீதம் மானியம் (Subsidy) உண்டு.
பி.எம்.இ.ஜி.பி.!
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (பி.எம்.இ.ஜி.பி.,), 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், உற்பத்தி பிரிவில், 25 லட்சம் வரையும், சேவை பிரிவில், 10 லட்சம் வரையும் விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது படிக்காதவர்கள் உற்பத்தி பிரிவில், 10 லட்சம் வரையும், சேவை பிரிவில், 5 லட்சம் வரையும் விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில், 35 சதவீதமும், நகர்புறங்களில், 25 சதவீதமும் மானியம் (Subsidy) உண்டு.
சிறப்பு 'லோன்மேளா'
இக்கடன் திட்டங்களுக்கான சிறப்பு 'லோன்மேளா (Loan)' மற்றும் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுகின்றன. திட்டம் குறித்த விபரங்களுக்கு, 89255 33936/35/32/34 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட தொழில் மையம் (District industrial centre) தெரிவித்துள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்த இந்த 5 சோதனைகளை செய்தே ஆக வேண்டும்!
நிலத்தடி நீரைப் பெருக்க கிணறுகளை மீட்டெடுக்கும் இளைஞர்கள்!
வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை குறைத்தது SBI: முழு விவரம் உள்ளே!