இந்தியாவிலேயே பொறியாளர்களை அதிகம் உருவாக்கி வரும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறியிருக்கிறது. இது பெருமைப்படக் கூடிய விஷயம். ஆண்டுதோறும் லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள். சிலர் படிக்கும் போதே இறுதி ஆண்டில் வேலை கிடைத்து செல்கிறார்கள். அதற்கு அவர்களுடைய கண்டுபிடிப்பு முக்கிய காரணமாக விளங்குகிறது.
புதிய கண்டுபிடிப்புகள் (New Invention)
இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். மாணவர்களின் கண்டுபிடிப்பை பொருத்தவரை சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்குப் பயன்படலாம். அவை பெரும்பாலும் செல்போன் ஆப்களாக உள்ளன. ஆனால் சில அரிய கண்டுபிடிப்புகள் தான் சமுதாயத்திற்குப் பயன்படும். அப்படி சமுதாயத்திற்குக் குறிப்பாக நமது எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கான கண்டுபிடிப்பாக விறகு அடுப்பிலிருந்து மின்சாரத்தைக் கண்டுபிடித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்கள் கும்பகோணத்தைச் சேர்ந்த இயந்திரவியல் பிரிவு மாணவர்கள்.
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களான பாலாஜி, குமரேசன், முகமது அனாஸ், முகமது ஜாவத், ஆகிய நான்கு மாணவர்கள் இணைத்து இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்புதான் என்ன? மாணவர்களின் வழிகாட்டியான உதவி பேராசிரியர் விஜய் கூறியது: இந்த அடுப்பு இயந்திரவியல் துறை மாணவர்களின் கண்டுபிடிப்பு. விறகு அடுப்பை எரிக்கும் போது வெப்பம் உருவாகும். வீணாகும் வெப்பத்தைத் தெர்மா எலக்ட்ரிக் ஜெனரேட்டர் என்ற கருவி மூலம் சேகரித்து மின்சாரமாக மாற்றுகிறார்கள். இதனைப் பேட்டரியில் சேகரித்து நமது தேவைக்காக மின்சாரமாகப் பயன்படுத்தலாம். இரண்டு செல்போன்களை சார்ஜ் செய்யலாம். இந்த வெப்பத்தைச் சேகரிப்பதற்காக அவர்கள் பிரத்யேகமான முறையில் அடுப்பையும் வடிவமைத்து இருக்கிறார்கள். இது தான் இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்பம்சம் என்றார்.
விறகு அடுப்பு (Wood Stove)
முன்பு விறகு அடுப்பு தான் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்பட்டன. நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று நாம் கேஸ் அடுப்புகளுக்கு மாறியுள்ளோம். ஆனால் நகரங்களை விடக் கிராமங்களில் விறகு அடுப்பை இன்றும் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். குறிப்பாகக் கேஸ் விலையேற்றம் காரணமாக அதிகம் பேர் விறகு அடுப்பிற்கு மாறியிருக்கிறார்கள்.
இந்த விறகு அடுப்பை வைத்து ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அப்போது தான் நாங்கள் படித்த சீபெக் விளைவு ஞாபகத்திற்கு வந்தது. அதாவது இரு வேறுபட்ட உலோகக் கம்பிகளை இணைத்து ஒரு சுற்று ஏற்படுத்தி சந்திகளை வெவ்வேறு வெப்பநிலையில் இருக்குமாறு செய்தால், ஒரு மின்னோட்டம் கம்பிச் சுற்றில் பாயக் காணலாம். இவ்விளைவு சீபெக் விளைவு (Seebeck effect) எனப்படும். இதனை அடிப்படையாக கொண்டு கண்டுபிடிக்கபட்டதே எங்களுடைய கண்டுபிடிப்பு.
மின்சாரம் (Electricity)
விறகு அடுப்பை பயன்படுத்தும் போது வீணாகும் வெப்பத்தைச் சேகரித்து மின்சாரமாக மாற்றுவது தான் எங்கள் கண்டுபிடிப்பு. இதற்காக விறகு அடுப்பு எரியும் போது அலுமினிய ராடு ஒன்றை அடுப்பில் இணைத்து விடுவோம். அதில் வீணாகும் வெப்பம் சேரும் வகையில் செய்துள்ளோம். அலுமினியம் ராடுடன் இணைக்கப்பட்டுள்ள தெர்மா எலக்ட்ரிக் ஜெனரேட்டர் என்ற கருவி இதனை மின்சாரமாக மாற்றி விடும். இதற்காக நாங்கள் நால்வரும் இணைந்து அடுப்பை ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். சேமிக்கப்பட்ட மின்சாரத்தை நமது தேவைக்காக எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இரண்டு செல்போன்களை முழுமையாக சார்ஜ் செய்யலாம். மின்சாரத் தட்டுப்பாட்டு உள்ள நேரங்களில் இது மிகவும் கை கொடுக்கும். குறிப்பாக அத்தியாவசிய தேவையான செல்போனை சார்ஜ் செய்யப் பயன்படுத்தலாம்.
எங்களுடைய இந்தக் கண்டுபிடிப்புக்கு ஆன செலவு ரூபாய் 2500 மட்டுமே. கிராமத்து மக்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் மலைப்பகுதியில் எல்லைகளைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள், காடுகளில் டிரக்கிங் செல்பவர்கள், பேரிடர் காலங்களில் விறகு எரித்து நமது தேவைக்காக மின்சாரத்தை உருவாக்கி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எங்களது கண்டுபிடிப்பை பற்றிக் கேள்விப்பட்ட இரண்டு ராணுவ அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து பார்வையிட்டு எங்களிடம் முழுமையான விளக்கம் கேட்டார்கள். நாங்கள் கூறினோம். பாராட்டினார்கள். மேலும் ராணுவ வீர்ர்களின் செயல்படுகளுக்கு கட்டாயம் இதனைப் பயன்படுத்தும் முயற்சியை மேற்கொள்வோம் என உறுதி அளித்தார்கள் மாணவர்கள்.
மேலும் படிக்க
பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் மாணவர்களுக்கு பரிசு: இளைஞர்கள் அசத்தல்!