தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாயின. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த, சிலாவட்டம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 34,621 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அலட்சியம்
இதில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டையில், 17,650 நெல் மூட்டைகள் அரசு திறந்தவெளி சேமிப்பு கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மீதம், 16,977 நெல் மூட்டைகள், ஒரு மாதமாக சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்லாமல், கொள்முதல் நிலையத்திலேயே பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது.
விவசாயிகள் வேதனை
இந்நிலையில் தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அவ்வாறு பெய்த மழையின் காரணமாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமாயின. தாங்கள் உயிரைக்கொடுத்து, விளைவித்த நெல்மூட்டைகள், சேதமாகி உள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, அரசு உடனடியாக நனைந்த நெல் மூட்டைகளை விரைந்து லாரிகள் மூலம் அரிசி ஆலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என, விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேபோல், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாகசாலை ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், இ- சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 1,400 மூட்டைகள் தேக்கி வைக்க இடம் வசதி உள்ளது.இந்நிலையில், மூன்று நாட்களாக நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல லாரி வராத நிலையிலும், விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்கப்பட்டு உள்ளது. இதனால், 4,500 நெல் மூட்டைகள் பாகசாலை நெல் கொள்முதல் நிலையத்தில் குவிந்தன.
3,100 நெல் மூட்டைகள்
இ -- சேவை மையத்தில், 1,400 நெல் மூட்டைகள் வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 3,100 நெல் மூட்டைகள் வெளியில் வைக்கப்பட்டு தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களாக இரவில் பெய்த கனமழையின் காரணமாக அனைத்து மூட்டைகளும் மழையில் நனைந்து நாசமாகின.
மேலும் படிக்க...