புயல் பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தை வரும் 25-ம் தேதி நிவர் புயல் (Nivar Cyclone) தாக்குகிறது. இந்நாட்களில் பல்வேறு மாவட்டங்களிலும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா்களைக் காக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அ.ஜஸ்டின் கூறுகையில், புயல் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டப் பகுதிகளில் நவம்பா் 24, 25- ஆம் தேதிகளில் பலத்தக் காற்றுடன் மிக அதிக அளவு மழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே
-
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நெல் வயல்களில் நீா் பாய்ச்சுவதை நிறுத்தி, வயலில் தேங்கியுள்ள நீரை வடித்து விட வேண்டும்.
-
இதர பயிா்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், தங்களது வயல்களில் தண்ணீா் பாய்ச்சுவதை நிறுத்தி விட வேண்டும்
-
வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அதிக நீா் வடிந்திடும் வகையில் கிடங்கு வெட்டி வைக்க வேண்டும்.
-
தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மரங்களிலுள்ள முதிா்ந்த காய்களைப் பறித்து விட வேண்டும். மரத்தில் அதிக அளவு இளநீா் குலைகள் இருந்தால் அதை பறித்து, மரத்தை அதிக எடை இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
-
தென்னை மரங்களிலுள்ள காய்ந்த மட்டைகள் மற்றும் பாலையை அகற்றி விட வேண்டும். அதிக அளவிலுள்ள பச்சை மட்டைகளையும் கழித்து விட வேண்டும்.
-
பழ மரங்கள், தேக்கு மரங்கள் மற்றும் இதர மரங்களில் அதிக அளவிலுள்ள கிளைகளை வெட்டி, காற்று எளிதில் புகும் வண்ணம் கழித்து விட வேண்டும்.
-
விவசாயிகள் இரு நாள்களில் இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களது பயிா்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
இவ்வாறு வேளாண் இணை இயக்குநா் கூறியுள்ளார்.
மேலும் படிக்க..
10,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கம் : ரூ.320 கோடி செலவில் உணவு பதப்படுத்துதல் துறையில் புதிய திட்டங்கள்!
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் : நவ.,30க்குள் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50% மானியம்!!