மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்ற வீரிய ஒட்டு ரகமான கோ 6 மக்காச்சோளம் 2012-இல் இந்திய அளவிலும், தமிழகத்திலும் வெளியிடப்பட்டது. 110 நாட்களில் இறவையில் எக்டேருக்கு சராசரியாக 8500 கிலோ, மானாவாரியில் 5000 கிலோ மகசூல் (Yield) தரும். அதிகபட்சமாக ஒரு எக்டேருக்கு 13 டன்கள் வரை மகசூல் தரும் வாய்ப்புள்ளது.
கோ. எச் (எம்) 8 வீரிய ஒட்டு ரகம்
தமிழகத்தில் பவானிசாகர், பவானி, மேட்டூர், சத்தியமங்கலம் மற்றும் அண்ணா பண்ணை மாநில விதைப்பண்ணைகளில் வேளாண் பல்கலை விஞ்ஞானிகளின் மேற்பார்வையில் கோ 6 வீரிய ஒட்டு ரக விதை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் 2013ல் வெளியிடப்பட்ட கோ. எச் (எம்) 8 வீரிய ஒட்டு ரகம் 95-100 நாட்களில் அறுவடை (Harvest) செய்யலாம். இறவையில் எக்டேருக்கு 8000 - 8500 கிலோ, மானாவாரியில் 4500 - 5000 கிலோ மகசூல் தரும். அதிகபட்சமாக 12 டன் வரை பெறலாம்.
விதையளவு மற்றும் விதை நேர்த்தி
ஒரு ஏக்கருக்கு வீரிய ஒட்டு மக்காச்சோள விதை 8 கிலோ வரை தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 6 கிராம் மெட்டலாக்ஸில் பூஞ்சாணக் கொல்லி மருந்தை ஈரவிதை நேர்த்தி செய்து உலரவிட வேண்டும். இதனால் அடிச்சாம்பல் நோய் தாக்குதலைத் தவிர்க்கலாம். கோடை உழவு செய்வதன் மூலம் படைப்புழுவின் கூட்டுப்புழு பருவங்கள் மண்ணில் இருந்து வெளியே வருகின்றன. இவற்றை பறவைகள் உண்பதால் பயிர்களில் பூச்சி தாக்குதல் (Pest Attack) குறையும். கடைசி உழவின் பொது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டால் கூட்டுப்புழுக்கள் பாதிப்புக்குள்ளாகும். இவை அந்துப்பூச்சிகளாக வெளிவருவது தடுக்கப்படுகிறது.
படைப்புழு மேலாண்மை
விதை நேர்த்தி செய்திருந்தாலும் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பிவேரியா பெசியானா பூஞ்சாணகொல்லி அல்லது தையாமீத்தாக்ஸம் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். இதனால் விதைத்த 25 நாட்களுக்கு படைப்புழுக்களிடமிருந்து ஆரம்ப நிலை பாதுகாப்பு கிடைக்கின்றது. மக்காச்சோளத்தை (Maize) நெருக்கி பயிரிடுவதால் புழுக்களும் அந்திப்பூச்சிகளும் அடுத்த செடிக்கு எளிதாக பரவும். பத்து வரிசைக்கு ஒரு முறை 60 செ.மீ இடைவெளி விட்டு நட்டால் பூக்கள் மற்றும் கதிர்பிடிக்கும் பருவத்தில் பூச்சிதாக்குதல் இருந்தால் எளிதாக மருந்து தெளிக்கலாம்.
வரப்பு பயிராக தட்டைப்பயிர், சூரியகாந்தி (Sunflower) மற்றும் எள் பயிர்களை 2 - 3 வரிசைகள் வளர்த்தால் நன்மை தரும் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பெருகும். ஏக்கருக்கு 20 என்ற அளவில் இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் இனக்கவர்ச்சி குப்பி வைத்து படைப்புழுக்களின் ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இதன் மூலம் இனச்சேர்க்கையும் பயிர்சேதமும் (Crop damage) தவிர்க்கப்படும்.
15-20 நாட்கள் வயதில் 10 லிட்டர் தண்ணீரில் 20 மில்லி அசாடிராக்டின் அல்லது எமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்ஜி 4 கிராம் கலந்து கைத்தெளிப்பான் மூலம் குருத்துப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். செடிகள் விசைத் தெளிப்பான் பயன்படுத்தக்கூடாது.
40-45 நாட்களில் ஸ்பைனிடோரம் 12 எஸ்சி 5 மில்லி அல்லது நோவலூரான் 10 இசி 15 மில்லி அளவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் குருத்துப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்கும் போது மருந்துகளை 3 மடங்கு அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்து விடும். விதைகள் கடினமாகவும், காய்ந்தும் காணப்படும். இப்பருவம் அறுவடைக்கேற்றது.
சீனிவாசன்
உதவி பேராசிரியர் பூச்சியியல் துறை
ரவிகேசவன்
துறைத்தலைவர் தானியங்கள் துறை
வேளாண் பல்கலை, கோவை
மேலும் படிக்க
கடலூரில் விதை பரிசோதனை திட்ட பணிகள் ஆய்வு! அதிக மகசூலுக்கு விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்!
சீசன் இல்லாத காலத்தில் மல்லிகைப்பூ பூக்க ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை! குறைந்த செலவில் அதிக இலாபம்!