கொடிய கொரோனாவுடன் தொடங்கிய 2020ம் ஆண்டு ஒரு வழியாக முடியப்போகிறது. ஆனால், கொரோனா நோய் தொற்று முடிந்தபாடில்லை. பல்வேறு இட்கட்டான சூழ்நிலையிலும் தொடர்ந்து இயங்கியது வேளாண்மை மட்டுமே. இந்த 2020ம் ஆண்டில் விவசாயிகளுக்கு வாழ்வளித்த உண்ணத திட்டங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana)
விவசாயிகளுக்கான முக்கியமான திட்டங்களின் முதன்மையான திட்டம் இந்த பி.எம்.கிசான் திட்டம் தான். விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டத்தில் ரூ.2000/- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணைகளில் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.
திட்டம் செயற்படுத்தப்பட்டது முதல் இந்த ஆண்டின் கடைசி தவணையான 7வது தவணை கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி விடுவித்தார். சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதி அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் இனைய விலக்கு அளிக்கப்பட்ட நபர்களான அரசு பென்ஷன் பெறுவோர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள், அரசியல்வாதி ஆகியவர்கள் தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
பிஎம் கிசான் திட்டத்தில் இணைவது எப்படி?
-
PM Kisan Samman Nidhi யின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://pmkisan.gov.in/ -க்கு செல்லவும்.
-
கிசான் கடன் அட்டைக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
-
உங்கள் நிலத்தின் ஆவணங்கள் மற்றும் பயிர் குறித்த விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும்.
-
பின் உங்கள் அருகில் உள்ள வங்கிக்குச் சென்று அதனை ஒப்படைக்கவும்
கிசான் கிரெடிட் கார்டு (KCC - Kisan Credit Card)
பிஎம் கிசான் திட்டத்தில் உள்ள விவசாயிகள் அணைவருக்கும் இந்த கிசான் கிரெடிட் கார்டு அல்லது விவசாய கடன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த கடன் அட்டை மூலம் விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன் குறைந்த வட்டியில் பெற முடியும். முறையாக தவணை செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
கிசான் அட்டை பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன?
-
விண்ணப்பதாரர் விவசாயத்துடன் தொடர்புடையவராக இருக்க வேண்டும்.
-
18 வயது முதல் 75வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
-
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் துணை விண்ணப்பதாரர் கட்டாயம் அவசியம்.
-
மற்றவரின் நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாய நபர் கூட இந்த கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana)
முந்தைய பயிர் காப்பீடு திட்டத்திற்கு மாறாக தேசிய அளவில் கொண்டு வரப்பட்டது தான் இந்த ஒருங்கிணைந்த பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம். (Pradhan Mantri Fasal Bima Yojana) எதிர்பாராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், விவசாயிகளின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ப (காரிஃப், ராபி) பயிர் காப்பீடு செய்துக்கொள்ள முடியும்.
இணைவது எப்படி?
-
இ-சேவை மையங்களில் நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு எண்ணுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.
ஆன்லைனில் PMFBY-க்கு விண்ணப்பிப்பது எப்படி?
-
PMFBY இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் - https://pmfby.gov.in/
-
முகப்பு பக்கத்தில் உள்ள Farmers corner-யை கிளிக் செய்யவும்
-
இப்போது உங்கள் மொபைல் எண்ணுடன் உள்நுழைக,
-
உங்களிடம் கணக்கு இல்லையென்றால் Guest Farmer என்று கிளிக் செய்து உள்நுழைக
-
பெயர், முகவரி, வயது, நிலை போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்
-
இறுதியாக Submit பட்டனை கிளிக் செய்க.
பிரதாமர் மன் தன் யோஜனா திட்டம் (Pradhan Mantri Kisan Maandhan Yojana)
பிரதமரின் கிசான் மன்தன் என்ற திட்டம் ஒரு விவசாயிகளுக்கான பென்ஷன் வழங்கும் திட்டமாகும். 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 18 வயதிற்கு ரூ.55 செலுத்த வேண்டும். பிரிமியம் தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு என வசதிக்கு ஏற்ப செலுத்தலாம். இந்த திட்டத்தில் 60 வயதிற்கு பின்னர் மாதம் ரூ.3,000/- ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்களுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்துக்கு சென்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம்.
வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம் - Agricultural Mechanization
தமிழகத்தில், விவசாயிகளின் வருமானத்தையும், வேளாண்மை உற்பத்தியையும் அதிகரித்திட வேளாண்மை பெறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தை (Government subsidy for farm implements) ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தி வருகிறது. இதனால் பண்ணை பணியாளர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டு, வேளாண் இயந்நிரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்குவதும், புதிய இயந்திரங்களை மற்றும் கருவிகளை விவசாயிகளிடையே பிரபலபடுத்துவதும் மேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் செயல்பாடுகளாகும்.
வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம்
மத்திய அரசுடன் இணைந்து சென்னை நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டம் (Sub Mission on Agricultural Mechanization) நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் மத்திய அரசு 60 சதவீதமும் , மாநில அரசு 40 சதவீதம் என்ற அடிப்பயில் பங்களிப்பாக உதவிகளை செய்து வருகிறது.
உழவன் செயலி
தனி விவசாயிகள் உழவன் செயலி மூலம் (Uzhavan APP) மானிய விலையில் இயந்திரங்ளை பெற வழிவகை செய்யப்படுள்ளது. இதன் மூலம் அவர்களின் விண்ணப்பங்கள் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in உடன் இணைக்கப்படும் பின்னர் இயந்திரங்களை மானிய விலையில் பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
பிரதமரின் கிருஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் (Prime Minister Krishi Sinchayee Yojana PMKSY)
பிரதம மந்திரி கிருஷி சின்சாயி திட்டமானது சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் தண்ணீரைச் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் குறிக்கோள் ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் என்பதாகும்.
'பெர் டிராப் மோர் கிராப்' திட்டம் - (Per Drop More Crop)
பிரதமர் கிருஷி சின்சாயி யோஜனா(PM Krishi Sinchayee Yojana)-வின் ஒருபகுதியாக பெர் டிராப் மோர் கிராப் (Per Drop more crop)என்ற திட்டத்தினை மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டமானது விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பான் பாசன முறைகள் போன்ற நுண்ணிய நீர்ப்பாசன நுட்பங்களை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பமானது, நீரை சேமிப்பது மட்டுமல்லாமல் உரப்பயன்பாடு, தொழிலாளர் ஊதியம் மற்றும் பிற செலவினங்களையும் குறைக்கிறது.