வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில், தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னரால் வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரி உள்ளது. பண்டைய காலங்களில், மன்னர்கள் புதிய நீர் நிலைகளை உருவாக்கும்போது, அவர்களின் பெயரே நீர்நிலைக்கு சூட்டுவர்.
16 கிராமம் (16 Villages)
அதுபோல் இளந்திரையன் என்ற மன்னனால் வெட்டப்பட்ட தென்னேரி ஏரிக்கு, 'திரையனேரி' என அழைக்கப்பட்டது. இந்த ஏரி, 18 அடி ஆழம், 5,686 ஏக்கர் பாசன பரப்பு உடையது. ஆறு மதகுகள் மற்றும் இரண்டு கலங்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இப்போது, நான்கு மதகுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன; இரு கலங்களில் தண்ணீர் வெளியேறுகின்றன.ஏரியில் நீர் நிரம்பினால், 16 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இரு பருவமும் நெல் சாகுபடி (Paddy Cultivation) செய்வர்.
ஏரியில் நீர் சேமிப்பு (Water Saving in Lakes)
ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று நீர் பாசனம் அமைக்கப்படாமல் எவ்வாறு வயலுக்கு நீர்பாய்ச்சினர் என,உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது: பண்டைய காலங்களில் பருவ மழையில் கிடைக்கும் மழை நீரை, பெரிய ஏரிகளில் தேக்குவர். ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரை, ஓடை மற்றும் சிற்றேரிகளில் சேகரிப்பர்.
சிற்றேரிகளில் நிரம்பிய பின், குளம், குட்டை, ஓடைகளில் தண்ணீரை சேமிக்கும் வழக்கம் இருந்தது. இந்த நீராதாரத்தை, விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்துவர். ஒரு ஏரிக்கு ஒரு கலங்கல் இருக்கும். தென்னேரியை பொறுத்தவரை கூடுதல் நிலப்பரப்பில் தண்ணீர் சேகரிப்பதால், மேட்டு கலங்கல் மற்றும் பள்ள கலங்கல் என, இரு வகையாக பிரித்து கட்டி உள்ளனர். பொதுவாக ஏரி நிரம்பும் போது, பள்ள கலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
2,000 ஆண்டுகள்
கூடுதல் தண்ணீரை தேக்குவதற்கு பலகைகள் போட்டு அடைத்தால், மேட்டு கலங்கலிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வகையில், கலங்கல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கால்வாய் வழியே அந்த தண்ணீர் இதை வைத்து தான் வயலுக்கு செல்லும்.கடந்த 8வது நுாற்றாண்டில் ஆட்சி செய்த இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னன் காசக்குடி செப்பேட்டில், 'திரளவிய தடாகம்' என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, 12ம் நுாற்றாண்டில், திரையன் ஏரி என அழைக்கப்பட்டு வந்தது.இந்த ஏரி, பாசன கால்வாய்களுக்கு செம்பியன்மாதேவி கால்வாய்; கண்டராதித்த கால்வாய்; மும்முடிச்சோழன் கால்வாய்; உத்தம சோழவதி வாய்க்கால் என, அழைக்கப்பட்டு வந்தன.இன்று, மேட்டு மதகு கால்வாய்; பள்ள மதகு கால்வாய்; புட்ட மதகு கால்வாய்; உள்ளாவூரான் மதகு கால்வாய் என, பெயர் மருவி அழைக்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு (Awareness)
மதகுகளில் இருந்து, பாசனத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீர், வண்டல் மண்ணும் சேர்ந்து வெளியேறும்போது, வயலுக்கு உரமாகி விளைச்சலை அதிகப்படுத்தியது. களர் நிலங்களை, விளை நிலங்களாக மாற்றி இருக்கிறது. இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நீர் சேகரிப்பு மேலாண்மை முறையை காட்டுகிறது. இளம் தலைமுறையினருக்கு, மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு லிட்டர் தண்ணீரும், எதிர்கால சந்ததியினருக்கு கேடு விளைவிக்கும் செயலாக கருதலாம். நீர் சேகரிப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன? சந்தை தகவல் மையம் கருத்து!