1. செய்திகள்

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன? சந்தை தகவல் மையம் கருத்து!

R. Balakrishnan
R. Balakrishnan
Reason for increase tomato price

தக்காளி விலை திடீரென உயர்ந்ததற்கு, பருவமழை அதிகமாகப் பெய்ததும், பயிரிடும் பரப்பு குறைந்ததுமே காரணம் என்று உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். கோவை வேளாண் பல்கலையில் செயல்பட்டு வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம், கடந்த 17 ஆண்டுகளாக, தமிழகத்தில் காய்கறி, உணவு தானியங்கள் மற்றும் தோட்டப் பயிர்களின் விலை நிர்வாகம், சந்தை நிலவரங்கள் குறித்து, விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கி வருகிறது. தற்போது தக்காளி விலை (Tomato Price), தமிழகத்தில் திடீரென எகிறியதற்கான காரணத்தையும் கண்டறிந்துள்ளது.

பயிரிடும் பரப்பு குறைந்தது (Farm Area Decreased)

இது குறித்து இந்த மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சிவகுமார் கூறியதாவது: தமிழகத்தில் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பில், தக்காளி பயிரிடப்படுகிறது. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், கோடை காலத்திலும், வடகிழக்குப் பருவமழை காலத்திலும், தக்காளி விலை சற்று உயர்ந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, மிகக்கடுமையாக விலை உயர்ந்துள்ளது.

இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது, இரண்டு முக்கியக் காரணிகள் தெரியவந்துள்ளன. கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் தமிழகத்தில் தக்காளியின் விலை மிகவும் சரிந்து விட்டது. இதன் காரணமாக விவசாயிகள், தக்காளி பயிரிடும் பரப்பைக் குறைத்து விட்டு, மாற்றுப் பயிருக்குச் சென்று விட்டனர்.

அது மட்டுமின்றி, பருவம் தவறி மழை பெய்தது. வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon) வழக்கத்தை விட மிக அதிகமாகவும் பெய்து தக்காளிச் செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தக்காளிகள் அழுகிவிட்டன.

இவ்விரு காரணங்களால் சந்தைக்கு தக்காளியின் வரத்து மிகவும் குறைந்து விலை எகிறி விட்டது. இதனால் நுகர்வோருக்கு (Consumer) தான் பாதிப்பே தவிர, விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கான பண்ணை விலை, கிலோவுக்கு 45 ரூபாயிலிருந்து 50 ரூபாய் தான் கிடைத்துள்ளது.

பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து தக்காளி வருவதால் ஒரு வாரத்தில் விலை சீராகி விடும். நம் நாட்டிலுள்ள நுகர்வோர் தன்மைதான், குறிப்பிட்ட காய்கறிகளின் விலை, ஏற்ற தாழ்வுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், எந்த வகை காய்கறியாக இருந்தாலும், பழமாக இருந்தாலும் ஒரு சீசனில் தான் வரும். மற்ற காலங்களில், அவற்றைப் பதப்படுத்தி, மதிப்புக் கூட்டி, வேறு விதங்களில் பயன்படுத்துவர். இதனால் விலையும் சீராக இருக்கும்.

நுகர்வோர் தன்மை (Consumer)

நமது நாட்டில் எப்போதுமே நேரடியாகத்தான் காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்துகிறோம். பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் போன்ற பணிகளைச் செய்யும்போது, விலை சீராக இருக்கும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். எனவே, நம் நாட்டில் நுகர்வோர் தன்மையை மாற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு முதன்மை ஆராய்ச்சியாளர் சிவகுமார் தெரிவித்தார்.
இடைத்தரகர்களுக்கே லாபம்: விவசாயிகள் கோபம்!

ஹைபிரிட் (Hybrid)

கோவையைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள் சிலரிடம் பேசியபோது, இந்த விலை உயர்வு அவர்களையும் கோபப்படுத்தியிருப்பது தெரியவந்தது. தீத்திபாளையம் விவசாயி பெரியசாமி கூறுகையில், ''தக்காளி விளைய 85 நாளாகும். எங்களுக்கு முட்டுவழிச் செலவும் ஏக்கருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இப்போது வரும் தக்காளியில் நோய் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அந்தக் காலத்தில் நாட்டு ரக தக்காளியில் நோய் பாதிப்பு அதிகமில்லை. வீரிய ரகம் அறிமுகம் செய்யப்பட்டபோது, ஆறு மாதங்கள் செடி இருந்தது. மூன்று முறை விளைச்சல் கொடுத்தது. இப்போது வரும் வீரிய ரகம், (ஹைபிரிட்) ஒரு முறை காய்த்து விட்டு மடிந்து போகிறது. 

நேரடி விற்பனை (Direct Sales)

பழனிசாமி கூறுகையில், ''ஒரு டிப்பர் தக்காளி உற்பத்திக்கே 100 ரூபாயாகிறது. வண்டி, பறிப்புக் கூலி சேர்த்தால் ரூ.150 ஆகிவிடும். எங்களிடம் இடைத்தரகர்கள் அந்த விலைக்கு வாங்கி, 200 ரூபாய்க்கு மேல் விற்கிறார்கள். லாபம் பார்ப்பது இடைத்தரகர்கள் தான். தக்காளி விவசாயிகளுக்கு நஷ்டம்தான். இனிமேல் நேரடியாக விற்றால் தான் லாபம் பார்க்க முடியும், என்றார்.

மேலும் படிக்க

பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

தொடர் மழை எதிரொலி: தக்காளி விலை உயர்ந்தது!

English Summary: What is the reason for the increase in tomato prices? Market Information Center Comment! Published on: 27 November 2021, 10:00 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.