தென்னைக்கு உகந்த ஊடுபயிரான கோகோ (Cocoa) சாகுபடிக்கு மானியம் பெற, விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோகோவிற்கு ஏற்ற சூழல் (Suitable environment for cocoa)
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி அதிகமுள்ளதால், ஊடுபயிராக கோகோ பயிரிட ஏற்ற சூழல் நிலவுகிறது.
எனவே கோகோ சாகுபடிக்கு, தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதிகளவில் தேவை (In high demand)
இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் வசுமதி கூறுகையில், ஐஸ்கிரீம், கேக், சாக்லேட், ஊட்டச்சத்து பானங்கள் ஆகியவற்றைத் தயாரிக்க முக்கியமான மூலப்பொருள் எதுவென்றால், கோகோதான். இதனால், கோகோவுக்கு, சந்தையில் எப்போதும் அதிகத் தேவை இருக்கிறது.
கோகோ சாகுபடி வழிமுறைகள் (Cocoa cultivation methods)
-
கோகோ, 50 சதவீத நிழலில் வளரும் தன்மை கொண்டது என்பதால், தென்னந்தோப்புகள் ஊடுபயிராகப் பயிரிட மிகவும் சிறந்தது.
-
45 ஆண்டுகள் வரை பலன் தரும். தென்னையின் நடுவே கோகோ பயிரிடுவதால், களைகள் கட்டுப்படும்.
-
மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதுடன் மண் அரிப்பும் தடுக்கப்படும்.
-
அதேநேரத்தில் கோகோ இலைகள் உதிர்ந்து மக்குவதால், மண்ணின் அங்ககச் சத்து ஹெக்டருக்கு, 1,000 - 1,200 கிலோ வரை அதிகரிக்கும்.
-
கோகோ பழத்தின் ஓடு, உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது.
-
தென்னந்தோப்பில் குளுமையான சூழலும் நிலவும். இதனால், தென்னை மகசூலும் அதிகரிக்கிறது.
தென்னையின் நண்பன் (Coconut's friend)
இப்படி கூடுதல் வருமானம் தருவதுடன், தென்னைக்கும் நன்மைகள் தருவதால், தென்னையின் நண்பன் என, கோகோ அழைக்கப்படுகிறது. முந்திரி, கோகோ மேம்பாட்டுக் கழக இயக்கக உதவியுடன், மானியம் வழங்கப்படுகிறது.
முன்பதிவு செய்யலாம் (Can be booked)
கோகோ பயிரிட விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி தோட்டக்கலை அலுவலகங்களை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். நடப்பு நிதியாண்டில் மானியம் அறிவிக்கப்பட்டவுடன், விவசாயிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!
உலகின் விலை உயர்ந்த காய்கறியை விவசாயம் செய்த இந்திய விவசாயி! ஒரு கிலோ ரூ.85,000!