கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தென்னந்தோதப்புகளில், வெள்ளை ஈக்கள் அதிகளவில் தாக்குவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த இலை மருந்தைப் பயன்படுத்தலாம் என இயற்கை விவசாயிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கிணத்துக்கடவு மேற்கு பகுதிகளான வடபுதூர், குதிரையாலாம்பாளையம், பொட்டையாண்டிபுரம்பு, சொக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில், தென்னந்தோப்புகளில், வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது.
வேளாண் துறை சார்பில், தென்னை மரங்களுக்கு இடையே மஞ்சள் அட்டை கட்டியும், தென்னை மட்டையின் அடியே தங்கியுள்ள ஈக்களை கட்டுப்படுத்த, தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வெள்ளை ஈக்கள் குறைந்தளவே கட்டுப்படுகிறது.
கடந்த வாரத்தில் மழை பெய்தும், அவற்றின் தாக்குதல் குறையவில்லை. மாறாக, வெள்ளை ஈக்கள் அதிகளவில் பெருக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக, மாலை, 6.00 முதல் இரவு 10.00 மணி வரை தென்னந்தோப்பில் வெள்ளை ஈக்கள் அதிகமாக பறக்கின்றன. இதன் காரணமாக ஆரஞ்சு நிற இளநீர் உற்பத்திக்கான, வீரிய ஒட்டு ரக தென்னை மரங்கள் அதிகளவில் பாதித்துள்ளது. ஈக்களை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்த வெள்ளை ஈக்களை இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இலை மருந்தைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்த முடியும் என இயற்கை விவசாயி வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இயற்கை இலை மருந்து (Natural Medicine)
தேவைப்படும் பொருட்கள்
வேப்பஇலை - 3 கிலோ
நொச்சி இலை - 3 கிலோ
புங்கம் இலை - 3 கிலோ
யூகலிப்டஸ் இலை (கிடைத்தால் சேர்த்துக்கொள்ளவும்)
தயாரிக்கும் முறை (Preparation Method)
இந்த இலைகளை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 10 லிட்டர் ஆகும் வரை கொதிக்கவேண்டும். பாத்திரத்தின் வாய்ப்பகுதியை மூடியிருக்க வேண்டியது அவசியம். பின்பு ஆறவைத்து, வடிகட்டி, ஸ்பிரேயரின் ஊற்றி தென்னை மரங்களில் அடிக்கலாம். இந்த மருந்தை அடித்த 24 மணி நேரத்திற்குள், ஈக்கள் தீமை செய்யும் பூச்சி வகையைச் சேர்ந்ததாக இருந்தால், அந்த இடத்தை விட்டு வெளியேறிவிடும்.
அல்லது நொச்சி இலைகளை நிழலில் உலர்த்தி, பெயிண்ட் டின்னில் (Paint Tin) போட்டு, அதனுடன் கற்புரத்தை கொளுத்திப் போட்டுவிட்டு, டின்னின் ஒரு பகுதியில் ஓட்டு போட்டு, அதன் வழியாக புகையை வருவதை உறுதி செய்துகொள்ளவும். பிறகு இந்த டின்னை தென்னை மரத்தின் அருகே கொண்டுசென்றால், தீமை செய்யும் பூச்சியாக இருந்தால், அவை பறந்துவிடும். நன்மை செய்யும் பூச்சியாக இருந்தால், இறந்துவிடும்.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டேருக்கு ரூ.4ஆயிரம்- வேளாண்துறை அறிவிப்பு!
செடியில் புழுத்தாக்குதலைக் புரட்டிப்போடும் இஞ்சி-பூண்டு- மிளகாய்க் கரைசல்!