Farm Info

Thursday, 02 January 2025 05:51 PM , by: Muthukrishnan Murugan

Coriander cultivation technology and harvesting

கொத்தமல்லி விதைக்காகவும், பச்சை இலைகளுக்காகவும் பயிரிடப் படுகின்றது. இப்பயிர் இந்தியா மற்றும் இதர நாடுகளில் சாதாரணமாகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

இதன் இலைகள் உணவு வகைளில் வாசனையை அதிகரிக்கவும், மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன. சட்னி தயாரிப்பதற்கும் கொத்தமல்லி இலைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. விதைகள் நறுமண மூட்டப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 0.1 முதல் 1 சதவீதம் வரை வாசனை எண்ணெய் உள்ளது. விதையைக் காயவைத்த நன்கு அரைத்து, அதனை மசாலாப் பொடியுடன் கலக்கின்றனர்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

அதிக தண்ணீர் சேமித்து வைக்கும் திறனுடன் கூடிய கரிசல் மண்ணில் கொத்தமல்லி மானாவரிப் பயிராகப் பயிரிடப்படுகிறது. வெயில் காலங்கள் தவிர மற்ற எல்லா காலங்களிலும் இது இலைக்காகப் பயிரிடப்படுகிறது. ஆனால் வறண்ட குளிர்ச்சியான காலநிலையே விதை உற்பத்திக்கு உகந்தாகும்.

இரகங்கள்

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக விளைச்சலைக் கொடுக்கக் கூடிய கொத்தமல்லி இரகங்கள் பயிரிடப்படுகின்றன. அவற்றுள் கோ.1, கோ.2, கோ.3, கோ.4, ஜி.சி.1, ஜி.சி.2, ராஜேந்திர ஸ்வாதி, ஆர். ஆர்.41, ஸ்வாதி மற்றும் சாதனா ஆகியவை முக்கியமான இரகங்களாகும்.

பருவம்

ஆந்திராவில் அக்டோபர்-நவம்பரிலும், தமிழ்நாட்டில் ஜீன்-ஜீலை மற்றும் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் பயரிடப்படுகின்றன.

விதைத்தல்

ஒரு எக்டருக்கு 10 முதல் 15 கிலோ வரை விதை தேவைப்படுகிறது. விதைகளை 12-24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இது விதைகளின் முளைப்புத்திறனை அதிகரிக்கும். பிறகு, விதை இருபாதியாக உடைத்து அவைகளுடன் 2 கிராம் திரம் ( 1 கிலோ விதைக்கு ) சேர்த்து, பின் விதைக்க வேண்டும்.

இடைவெளி

நீர் அதிகமுள்ள பகுதிகளில் 30 X 15 செ.மீ. இடைவெளி இருக்குமாறு பயிரிடப்படுகிறது. மானாவாரியாகப் பயிரிடும்போது, விதைகள் நேரடியாக விதைக்கப் படுகின்றன.

உரமிடல்

எக்டருக்கு 10 டன் தொழு எருவம், 30:40:20 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகிய உரங்களும் இடவேண்டும்.

Read also: சமவெளிப்பகுதியில் மிளகுடன் ஜாதிக்காய் சாகுபடி- அசத்திய புதுக்கோட்டை விவசாயி!

நீர்பாய்ச்சுதல்

விதைத்து மூன்று நாட்களில் முதல் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சிட வேண்டும்.

பின்செய் நேர்த்தி

இலைகளுக்காகப் பயிரிடும்போது 30 நாட்கள் அப்படியே அறுவடை செய்து விடலாம். விதைகளுக்காகப் பயிரிடும்போது, விதைத்து 30 ஆவது நாளில் களை எடுக்க வேண்டும். களை எடுக்கும்போதே ஒரு இடத்தில் இரண்டு செடிகளை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை கலைத்து விட வேண்டும். வளர்ச்சியைப் பொறுத்து மேலும் ஒன்று அல்லது இரண்டு முறை களை எடுக்க வேண்டும்.

பயிர்ப்பாதுகாப்பு

இப்பயிரைப் பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. நோய்களைப் பொறுத்தவரை தண்டு முடிச்சு, மாவு நோய், வாடல் நோய் போன்றவை முக்கியமானவைகளகாகும். இவைகள் வராமலிருக்கே நோய் பரப்பும் பூஞ்சானமில்லாத நல்ல இரகங்களின் விதைகளைத் தோந்தெடுத்து விதைக்க வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் கலந்து விதைப்பதன் மூலம் தண்டு முடிச்சு நோய் மற்றும் வாடல் நோய் வராமல் தடுக்கலாம். மாவு நோய் வராமலிருக்க அல்லது குணப்படுத்த ஒரு எக்டருக்கு 2 கிலோ என்ற அளவில் நனையும் கந்தகத்தைத் தெளிக்கலாம்.

அறுவடை

இலைகளுக்காகப் பயிரிடும்போது செடியை 30-40 நாட்களில் முழுவதுமாய் பிடுங்கி எடுக்க வேண்டும். விதைக்கெனில் விதைகள் காய்ந்து போகாமல் இலேசாக பச்சையாக இருக்கும்போதே அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்

இலைகளுக்காகப் பயிரிடும் போது 6-7 டன் இலைகள் ஒரு எக்டரிலிருந்து மகசூலாகக் கிடைக்கிறது. விதைக்காகப் பயிரிடும் போது இறவைப் பயிரிலிருந்து ஒரு எக்டருக்கு 500-600 கிலோ விதைகளும், மானாவாரிப் பயிரிலிருந்து ஒரு எக்டருக்கு 300-400 கிலோ விதைகளும் கிடைக்கின்றன.

இக்கட்டுரை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புதினா சாகுபடி தொழில்நுட்பம் குறித்த மற்ற கேள்விகளுக்கு கட்டுரை ஆசிரியர் முனைவர் இரா.ஜெயவள்ளி., (உதவிப்பேராசிரியர்,தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி ) அவர்களைத் தொடர்புக் கொள்ளலாம். அலைப்பேசி எண்: 94876 16728.

Read more:

விவசாயிகளே.. வாழைத் தார்களை இப்படி பராமரித்தால் லாபம் நிச்சயம்!

Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)