உடுமலைப் பகுதியில் பந்தல் இல்லாமல் தரையில் புடலை சாகுபடி (Cultivation of sorghum) செய்து அசத்தி வருகிறார்கள் விவசாயிகள். ஆனால், போதிய விலை கிடைக்காததால் கவலையடைந்துள்ளனர். பொதுவாக பந்தல் அமைத்து தான் புடலை சாகுபடி நடைபெறும். ஆனால், பந்தல் இல்லாமலேயே புடலை சாகுபடியில் உடுமலை விவசாயிகள் அசத்தி வருகின்றனர்.
பந்தல் காய்கறிகள்
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை சாகுபடிக்கு (Coconut Cultivation) அடுத்தபடியாக அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருளான காய்கறி உற்பத்தி இன்றைய நிலையில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. பருவநிலை மாறுதல்கள் காய்கறி உற்பத்திக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இருப்பினும் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு ஆகிய 2 காரணிகளே விவசாயிகளின் வருமானத்தைத் (Income) தீர்மானிக்கும் மிக முக்கிய விஷயங்களாக உள்ளது. உற்பத்தி குறையும் போது மொத்த விற்பனை சந்தைக்கு வரத்து குறைந்து விலை அதிகரிப்பதும், உற்பத்தி அதிகரிக்கும் போது வரத்து அதிகரித்து விலை உயர்வதும் தொடர்கதையாக உள்ளது. பெரும்பாலான காய்கறிப்பயிர்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான போதிய வழிகாட்டல்கள் இல்லாததால், வரத்து அதிகரிக்கும் நேரங்களில் விவசாயிகள் இழப்பைச் (Loss) சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
உடுமலை பகுதியில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே பந்தல் காய்கறிகளான புடலை பாகல், பீர்க்கன் போன்ற கொடி வகைப் பயிர்கள் சாகுபடியில் (Cultivation) ஈடுபட்டு வருகின்றனர். பந்தல் அமைப்பதற்கு பெரும் செலவு பிடிப்பதே இதற்குக் காரணமாகும். பந்தல் சாகுபடியைப் பொறுத்தவரை கல் தூண்கள் அமைத்து கம்பிகள் கட்டி அமைக்கப்படும் பந்தல் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்கிறது. இதன் மூலம் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பந்தல் சாகுபடி மேற்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் ஒதிய மரம், இலுவை மரம், கல் மூங்கில், கான்க்ரீட் தூண்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்படும் பந்தலுக்கு செலவு குறைவு என்றாலும் ஆயுட்காலமும் குறைவாகவே உள்ளது.
மகசூல் குறைவு
ஒரு சில விவசாயிகள் பந்தல் அமைக்காமலேயே கொடிகளைத் தரையில் படர விட்டு பாகல், புடலை போன்ற காய்கறிகளைப் பயிரிட்டு வருகின்றனர். அந்த வகையில் உடுமலையை அடுத்த தாந்தோணி பகுதியில், புடலைக்கொடிகளை தரையில் படர விட்டு சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். புடலை சாகுபடியைப் பொறுத்தவரை விதைத்து 70 முதல் 75 நாட்களில் அறுவடை (Harvest) செய்யத்தொடங்கலாம். அதன்பிறகு ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யமுடியும். பந்தல் அமைத்து சாகுபடி செய்யும்போது காய்கள் நீளமாகவும் பருமனாகவும் இருக்கும். இதனால் கூடுதல் மகசூல் (Yield)கிடைக்கும். ஆனால் தரையில் படர விடும்போது காய்கள் சிறிய அளவிலேயே இருப்பதால் மகசூல் குறைவாகவே இருக்கும். அத்துடன் பந்தலில் நன்கு விளைந்த காய்களை எளிதாகக் கண்டுபிடித்து அறுவடை செய்ய முடியும். தரையில் படர விடும்போது கொடிகளை விலக்கி தேடித் தேடி அறுவடை செய்ய வேண்டும். ஆனால் சமீப காலங்களாக பந்தல் புடலையை விட தரையில் படர விடும் சிறிய புடலையை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
கடந்த மாதம் ஓரளவு நல்ல விலை கிடைத்து வந்தது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.7க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. அத்துடன் காலை 10 மணிக்குள் மொத்த விற்பனை மண்டிக்கு கொண்டு செல்லாவிட்டால் விற்பனையாகாமல் திரும்ப கொண்டு வரும் நிலை ஏற்படுகிறது.
கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிக அளவில் இருப்பதால் குறைந்த பரப்பளவில் சாகுபடி செய்து குடும்பத்துடன் அதிகாலை முதல் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு, அவசரம் அவசரமாக விற்பனைக்கு கொண்டு வருகிறோம். இருப்பினும் போதிய விலை கிடைக்காத நிலையே உள்ளது என்று
விவசாயி ஒருவர் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அளித்ததில் தமிழகம் முதலிடம்! மத்திய அரசு தகவல்!
கடும் வீழ்ச்சியில் வெங்காயத்தின் விலை! விவசாயிகள் கவலை!