ஊரடங்கு காரணமாகச் சாகுபடிப் பணிகள் எந்த மாவட்டத்திலும் பாதிக்கக்கூடாது எனத் தமிழக வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
கோடைகால சாகுபடி (Summer cultivation)
தமிழகத்தில் தற்போது, கோடைகால நெல் சாகுபடி பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பயன்படுத்திக் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் வாசனை பொருட்கள் சாகுபடியிலும் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், சாகுபடியைத் துவங்கும் பணிகளில் விவசாயிகள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.
இரவு நேர ஊரடங்கு (Night time curfew)
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கைத் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. எனினும், ஊரடங்கு நேரத்தில் விவசாயம் தொடர்பான பொருட்களை எடுத்துச் செல்ல விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ககன்தீப் சிங் உத்தரவு
-
எனவே விவசாயிகள் சாகுபடி செய்வதற்குத் தேவையான விதை, உரம், நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளிட்டவைத் தங்குத்தடையின்றிக் கிடைக்க வேண்டும்.
-
வேளாண் பொறியியல் வாயிலாகச் சாகுபடிக்கான இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும்.
-
வழக்கம்போல், விவசாயிகளைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளை, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் வழங்க வேண்டும். எந்தவகையிலும் சாகுபடிப் பணிகள் பாதிக்கப்படக்கூடாது.
-
ஊரடங்கு காலத்தில் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வேளாண் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவைச் செயல்படுத்தும்படி வேளாண்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் தங்களுக்குக் கீழ் உள்ள அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்!
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி!