நடப்பு காலங்களில் பெய்து வரும் அதிகமான மழை பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தமிழக அரசு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
தமிழகத்தில் ஆண்டு முழுவதும் இயல்பாக 937.50 மிமீ மழை பெய்கிறது. இதில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவத்தில், 448 மிமீ (48%) மழையளவு கிடைக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை இயல்பாக பெய்ய வேண்டிய 288.3 மி.மீட்டருக்கு 327.9 மி.மீ மழை, அதாவது 14 சதவீதம் கூடுதலாக மழை பெய்து இருக்கிறது.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட வாரியாக ஆய்வு செய்தால், 2 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதம் கூடுதலாகவும், 12 மாவட்டங்களில் 20 முதல் 59 சதவீதம் கூடுதலாகவும், 21 மாவட்டங்களில் இயல்பான மழையும் பெய்து இருக்கிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 722.1 மி.மீட்டரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 516.7 மி.மீட்டரும், கடலூர் மாவட்டத்தில் 485.9 மி.மீட்டரும் மழை பெய்து இருக்கிறது.
இதனால், இம்மாவட்டங்களில் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நெல் பயிர் உட்பட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி, தற்போது வடிந்து வருகிறது. இந்த நேரத்தில் விவசாயிகள் சில முக்கியமான பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதன் விவரங்களை தமிழக வேளாண் துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அவை,
1. விளை நிலங்களில் உள்ள சிறு பாசன மற்றும் வடிநீர் வாய்க்கால்களில் உள்ள செடி கொடிகளை அகற்றுதல் வேண்டும்.
2. மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உள்ள அதிகப்படியான நீரை உரிய வடிகால் வசதியை உருவாக்கி வெளியேற்றுதல் வேண்டும்.
3. மழைக் காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.
பருவ மழையினால் பயிர்கள் பாதிக்கப்படும் நேரத்தில் கிராமத்திற்குச் சென்று பயிரைக் கண்காணித்து விவசாயிகளுக்குத் தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்ற வேண்டும் என்று வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையைச் சார்ந்த அலுவலர்களுக்கு அரசு தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே, அலுவலர்கள் கூறும் அறிவுரைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க