Farm Info

Tuesday, 17 August 2021 06:34 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நேரத்தில், சம்பா பருவத்திற்கான நெல் ரகங்கள் பற்றியும், அவற்றை சாகுபடி செய்யும்போதுக் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுணுக்கங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

சம்பா பருவம் (Samba season)

தஞ்சை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு விவசாயிகள் மும்முரமாக வயல்களை தயார் செய்து வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு, தஞ்சை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் செல்வநாயகம் வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில், சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் பற்றியப் பல்வேறுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தரமான விதைகள் (Quality seeds)

லாபகரமான பயிர் சாகுபடிக்கும் மிகுதியான மகசூல் பெறுவதற்கும் தரமான விதைகளும், இடுபொருட்களுமே ஆதாரம்.அதிக அளவில் மகசூல் பெறுவதற்கு பண்ணையில் பயிர் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கும் பயன்படுத்தப்படும் விதைகள் தரம் உள்ளதாக இருக்க வேண்டும்.

நெல் விதையைப் பயன்படுத்துவதால் 10 முதல் 15 சதவீதம் அதிக விளைச்சல் உறுதி செய்யப்படுகிறது. பருவத்திற்கேற்ற விதை ரகங்களை நாம் பயன்படுத்த முன்வரும்போது இரகத்தின் மரபுத்திறன் முழுமையாக வெளிப்பட்டு அதிக மகசூல் கிடைப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.

சி.ஆர். 1000 சப் 1

இது ஒரு நீண்ட கால பயிர் ரகமாகும். இதன் வயது 150 முதல் 155 நாட்கள். காவிரி டெல்டா போன்ற தண்ணீர் தேங்கும் பகுதி களில் பயிரிடுவதற்கு ஏற்ற சிறந்த இரகம். நடவு செய்து 15 நாட்கள் வரை நீரில் மூழ்கி இருந்தாலும் அதை தாங்கி வளரக்கூடியது.

அரிசி குட்டையாகவும் பருமனாகவும் அதிக அரவை திறனுடனும் முழு அரிசியாக மாற்றும் திறனுடன் இருக்கும். இதன் அரிசி இட்லி தயாரிப்பதற்கு மிகச் சிறந்தது. இந்த ரகத்தை சாவித்ரி நெல் ரகத்திற்கு மாற்று இரகமாக பயிரிட பரிந்துரைக்கப்படுகிறது. பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புச் சக்தி உடையது.

ஆடுதுறை 51

இந்த ரகம் நீண்ட காலப் பயிர் ரகமாகும். இதன் வயது 155 முதல் 160 நாள் பயிராகும். பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. சாயாதத் தன்மை கொண்டது. இது மத்திய சன்ன இரகமாகும். இந்த ரகத்தின் அரிசி சாப்பாடு மற்றும் பலகாரத்திற்கு ஏற்றதாகும்.

ஆடுதுறை 54

இது ஒரு மத்திய கால ரகம் ஆகும். இதன் வயது 140 முதல் 145 நாட்கள் ஆகும். இது மேம்படுத்தப் பட்ட வெள்ளை பொன்னி ரகத்திற்கு மாற்றாக தமிழ்நாடு ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறையால், சமீபகாலத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் அரிசி அதி சன்ன வகையைச் சேர்ந்தது.

கோ ஆர் 50

இது மத்திய கால ரகம் ஆகும். இதன் வயது 130 முதல் 135 நாட்கள் ஆகும். இந்த ரகம் சம்பா, பின் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு ஏற்ற ரகமாகும். இந்த ரகம் குலைநோய், இலை உறை அழுகல், இலைப் புள்ளி நோய், பாக்டீரியா இலைக் கருகல் மற்றும் துங்ரோ ஆகிய நோய்களுக்கு எதிர்ப்புச் சக்தி உடையது. இதன் அரிசி மத்திய சன்ன வகையைச் சேர்ந்தது. களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற இது சாயாத தன்மை கொண்டது. எனவே இந்த ரக நெல் விதைகளைப் பயிரிட்டு விவசாயிகள் பயனடையலாம்.

மேலும் படிக்க...

வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில் ஒரு நாள் வகுப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)