கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் குறித்து ஆட்சியருக்கு கோரிக்கை வைத்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொட்டு நீர்ப்பாசனம் வழங்கிட அரசுக்கு முன்மொழி அனுப்பப்பட்டுள்ளது.
விவசாயிகளின் குறைகளை நேரடியாக கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (19.01.2024) நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 192 மனுக்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
விவசாயிகள் வைத்த முக்கிய கோரிக்கை:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வடமேற்கு மண்டலத்துக்கு ஏற்ற நெல், மா ஆகியவைகளின் புதிய ரகங்களை வெளியிடவும், விவசாய பயிர்களை சேதம் விளைவித்து வரும் குரங்குகளை பிடிக்கவும், சொட்டுநீர்ப் பாசனம் 7 வருடத்திற்கு ஒருமுறை மாற்றும் திட்டத்தை 3 அல்லது 5 வருடமாக மாற்றவும், அனுமந்திரத்தம் தென்பெண்ணை ஆறு மற்றும் பாம்பாறு கூடும் இடத்தில் தடுப்பணை அமைக்கவும், மா பயிரிடு விவசாயிகளுக்கு பூச்சி மருந்து பயன்படுத்தும் அளவு மற்றும் மருந்துகள் விவரம் அடங்கிய பயிற்சி வழங்கவும், கால்நடை தாது உப்புகளை மானிய விலையில் வழங்க கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கைகளுக்கு ஆட்சியரின் பதில்:
விவசாயிகளின் கோரிக்கையான நெல், மா ஆகியவைகளின் புதிய ரகங்களை வெளியிட இது தொடர்பான, முன்மொழிவு துணைவேந்தர், இயக்குநர் ஆராய்ச்சி, வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் அவர்களுக்கு அனுப்பப்படும் எனவும், விவசாய பயிர்களை சேதம் விளைவிக்கும் குரங்குகளை பிடிக்க கூண்டு பொருத்தப்பட்டுள்ளது எனவும் ஆட்சியர் தெரிவித்தார். 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொட்டுநீர்ப் பாசனம் வழங்கிட அரசுக்கு முன்மொழிவு அனுப்பபட்டுள்ளது. அனுமந்தீர்த்தம் தென்பெண்ணை ஆறு மற்றும் பாம்பாறு கூடும் இடத்தில் தடுப்பணை அமைக்க களஆய்வு செய்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்படும். மா பயிரிடும் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து பயன்படுத்தும் அளவு மற்றும் மருந்துகள் விவரம் அடங்கிய பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்படும். கால்நடை தாது உப்புகள் நடப்பு ஆண்டு 24,000 கிலோ வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மண் வள அட்டை வழங்கல்:
சூளகிரி ஊராட்சி ஒன்றியம், காமன்தொட்டி, பீர்பள்ளி, மாதரசனப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பில் இயற்கை உரம், மருந்து தெளிப்பான்கள் மற்றும் மண் வள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார். அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பர்கூர் வட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஜோதி தங்களது நிலத்தில் சாகுபடி செய்து விளைவித்த சீரக சம்பா, கருப்பு கவுனி, தூயமல்லி மற்றும் இரத்தசாலி ஆகிய பாரம்பரிய அரிசி ரகங்களை வேளாண்மைத்துறை சார்பாக, விவசாயிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில், எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையம் சார்பாக, முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் சுந்தராஜ் அவர்கள் நெல்லில் ஏற்படும் குலைநோய்க்கு காரணமான புகையான் பூச்சியினை விவசாயிகள் அறிந்து கொள்வதற்கும், அதனை தடுப்பதற்கான மருந்துகளின் பெயர் மற்றும் அளவு விளக்ககாட்சியாகவும் எடுத்துரைத்தனர்.
Read also:
TN land survey- இணையதளத்தில் பட்டா மாறுதல் உட்பட இவ்வளவு வசதிகள் உள்ளதா?