Farm Info

Friday, 31 July 2020 05:00 PM , by: Elavarse Sivakumar

Credit: Hindu Tamil

ஒன்றா, இரண்டா எத்தனை உறவுகள் இருந்தாலும், நம் எண்ணத்தை, கவலையை, அப்படியே ஒப்படைத்து ஆறுதல் தேடிக்கொள்ளும் உன்னதமான பாசப் பிணைப்பு என்றால், அது நண்பன்தான். தோழமை என்றும் சொல்லலாம்.

எந்த உறவிடமும் கூற முடியாத விஷயத்தைப் பகிர்ந்துகொள்ள சிறந்தது என்றால் அது நட்புதான். பிரதிஉபகாரம் பார்க்காது இந்த நட்பு. காலங்கள் பலக் கடந்தாலும் என்றும் மாறாதது. பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால், பசுமையான நினைவுகளை சுமந்து நிற்பது நட்பு.

ஜூலை 30ம் தேதி சர்வதேச நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டாலும், இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவது, ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்றுதான். அதன்படி வரும் 3ம் தேதி வரப்போகிறது நண்பர்கள் தினம்.

கொரோனா அச்சத்தால், நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், அலைபேசியிலாவது நம் அன்பைப் பரிமாறி நட்பை கவுரவப் படுத்துவோம். அந்த வகையில், விவசாயிக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட நண்பன் யார் தெரியுமா?

அதுதான் மண்புழு. விவசாயத்தின் ஒவ்வொரு விஷயத்திற்கும் அடித்தளம் அமைத்து அதிக மகசூல் மூலம் லாபம் பெற வழிகாட்டுகிறது மண்புழு. இந்தியாவில் 384 வகைகள் உள்ளன. இதில் 6 வகையான மண் புழுக்கள் உரம் தயாரிக்க உகந்தவை. இவற்றால் எந்தவிதத் தீமையும் ஏற்படுவதில்லை, எந்த மாசுபாடும் ஏற்படுவதில்லை.

மண்புழு வளர்ப்பு

மண்புழுக்களை வீட்டுத் தோட்டத்தில்கூட எளிமையாக வளர்த்து உரமாக்கிப் பயன்படுத்தலாம்.

செய்முறை

நிலத்தில் ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழம், ஒரு அடி நீளம் கொண்ட குழியைத் தோண்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அன்று போட்ட சாணி, அதாவது பச்சை சாணி 3 கிலோ வரை சேகரித்து, அதில் 250 கிராம் நாட்டுச் சர்க்கரை நன்கு கலந்து கலவை உருவாக்க வேண்டும். இந்த கலவையை அந்தக் குழிக்குள் போட்டு,மேலே ஒரு சாக்குப்பை போட்டு மூடவும். பிறகு இந்த சாக்கை தண்ணீர் ஊற்றி ஈரமாக்கவும்.

முடிந்த அளவுக்கு சாக்கு எப்போதும் ஈரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். காலை, மாலை இரு வேளையும், சாக்கில் தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக வைக்கவும். 10 முதல் 12 நாட்கள் கழித்துப் பார்த்தால், நாம்  போட்டக்  கலவையில்  மண்புழுக்கள்  அதிக அளவில் வளர்ந்திருக்கும். ஏனெனில் மண்புழுக்களை ஈர்த்து, அவற்றின் இனத்தைப் பெருக்கும் தன்மை படைத்தவை சாணிக்கலவை.

அவ்வாறு தயாரிக்கப்படும் மண்புழுவை, வீட்டில் இருந்துக் கிடைக்கும் காய்கறி உள்ளிட்ட கழிவுகளோடு சேர்த்து சேகரித்து 40 நாள் வரை மட்க வைத்தால், நீங்கள் போட்ட உரம் இருமடங்காக மாறியிருக்கும். மண்ணுக்கு உயிரான மண்புழு உரம், இயற்கை உரங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

Credit: Amazon.in

மண்புழு உரத்தின் நன்மைகள்

  • மண்புழு உரம் விவசாயிகளுக்குக் கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்.

  • மண்புழு உரம் இடுவதால் மண் துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி, குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.

  • மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படுத்தப்படுகிறது.

  • களிமண் பாங்கான மண்ணில் உள்ள குழம்புத் தன்மையைக் குறைக்கிறது.

  • மண் அரிப்பு, கோடைக் காலத்தில் மண்ணின் வெப்பநிலை ஆகியவற்றைக் குறைத்து வேர்க்காயம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

  • மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிப்பதால் பயிர் கோடையிலும், நல்ல முறையில் பாதுகாக்கப்படுகிறது.

  • மழைக் காலங்களில் மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

  • சத்துக்களை எடுக்கும் புது வேர்கள் உருவாக மண்புழு உரம் பயன்படுகிறது.

  • மண்புழு உரத்தால் ஏற்படும் அமிலமும் கார்பன்- டை- ஆக்சைடு வாயுவும் மண்ணின் காரத் தன்மையைக் குறைத்து உரப்பிடிப்புத் திறனை மேம்படுத்துகிறது.

  • மண்ணில் உள்ள கரையாத தாதுக்களை கரையச் செய்து தாவரங்களுக்கு கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்தாக மாற்றுகிறது.

  • மண்ணிற்கு சத்துக்கள் அளிப்பதுடன் தாவரங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகை நுண்ணூட்டச் சத்துக்களையும் சீரான அளவில் வழங்குகிறது.

  • மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய கன உலோகங்களைத், தற்காலிகமாக ஈர்த்துக் கொள்வதால் தூய்மையான நிலத்தடி நீர், பயிர்களுக்கான ஊட்டச்சத்துக்களையும் ஆற்றலையும் அளித்து மண்வள மேம்பாட்டிற்கு வித்திடுகிறது.

  • மண்புழு உரத்தில், அதிகப்படியாக அங்கக கரிமம் 20 முதல் 25 சதம் வரை உள்ளது.

  • குறிப்பாக பழங்களின் நிறம், ருசி, மணம், பழங்கள் சேமித்து வைக்கும் காலம் போன்றவை அதிகரிக்கின்றன.

  • மண்புழு உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளம் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டு, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

  • பூச்சி மற்றும் நோய் தாக்குதலை வெகுவாகக் குறைக்க உதவுகிறது.

  • மண்புழு உரத்தில் அதிகப்படியாகக் காணப்படும் கியூமிக் அமலம் வேர் வளர்ச்சியைத் தூண்டுகிறது.இதனால் பயிருக்குத் தேவையான உரங்களை மண்ணில் இருந்து எடுக்க உதவுகிறது.

  • பயறு நடவு செய்த பின்னர், கடைசி உழவில் ஏக்கருக்கு நெல்லுக்கு ஒரு டன்னும், கரும்புக்கு ஒன்றரை டன்னும், பருத்திக்கு ஒரு டன்னும், மிளகாய்க்கு ஒரு டன்னும், சூரியகாந்திக்கு ஒன்றரை டன்னும், மக்காச்சோளத்துக்கு ஒன்றரை டன்னும் மண்புழு உரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

 

மேலும் படிக்க...

தாலிபாக்கியம் தரும் வரலட்சுமி விரதம் - இன்று கடைப்பிடிப்படுகிறது!

ஆக.31 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கும் : தமிழக அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)