முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். ஆனால், மாம்பழம் என்றாலே சேலத்து மாம்பழம்தான், நம் அனைவரின் நினைவுக்கும் வரும். இதற்கு, அதன் தித்திக்கும் சுவையே நமக்குச் சாட்சி.
சேலம் மாம்பழம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கும், அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது.
சேலம் மார்க்கெட்டிற்கு சங்ககிரி, ஆத்தூர், வனவாசி, மேச்சேரி, நங்கவள்ளி, தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், தினமும் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
சீசன் தொடங்கிவிட்டதால், கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
பலவகை மாம்பழங்கள் (A variety of mangoes)
அதாவது சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. இதனை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
வெளியூர்களுக்கு விற்பனை (Sale to outsiders)
மேலும் சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் வ.உ.சி. மார்க்கெட், கடை வீதி செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரிகள் மாம்பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். தள்ளுவண்டிகளிலும் வியாபாரம் களை கட்டி உள்ளது.
இது குறித்து மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், மாம்பழ சீசன் தொடங்கியதால் சேலம் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சேலத்தில் இருந்து சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மாம்பழ ஏற்றுமதி (Export of mangoes)
மேலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் சுவைமிகுந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இனிவரும் 15 நாட்களில் மாம்பழங்களின் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது சேலம் மார்க்கெட்களில் ஒரு கிலோ மாம்பழம் ரூ.100 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் கொரோனாத் தொற்று வேகமாகப் பரவுவதால் தமிழக அரசு பல்வேறுக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் திருவிழாக்கள், சந்தைகளுக்கு கடந்த ஆண்டைப் போல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வருவாய் குறைந்தது (Revenue is low)
கடந்த ஆண்டும் மாம்பழ சீசன் நேரத்தில் கொரோனா ஊரடங்கால் மா மரங்களில் மகசூல் அதிகமாக இருந்தும், அதை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் போனது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் குறைந்தது.
விவசாயிகள் எதிர்பார்ப்பு (Farmers expect)
இந்த ஆண்டு சீசனிலாவது போதிய வருவாய் பெறலாம் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் தற்போதும் சீசன் நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலையில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.41¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்!
இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி!