100% மானியத்தில் விவசாயிகளுக்கு பாசனக் கருவிகள் வழங்க உத்தரவு, பயிர்க்காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள், காளான் வளர்ப்பு பற்றிய ஒருநாள் இலவச பயிற்சி! விவசாயிகளுக்கு அழைப்பு, கரும்பு விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு ஆகிய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
100% மானியத்தில் விவசாயிகளுக்கு பாசனக் கருவிகள் வழங்க உத்தரவு!
அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பகுதிகளுக்கு மானியம் வழங்க வேண்டி ரூ. 7.82 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளுக்குப் பாசனக் கருவிகள் மானிய விலையில் வழஙகப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசன கருவிகளை, தங்களது வயல்களில் நிர்மானித்துக்கொள்ள மானியம் அனமதிக்கப்பட்டு வருகிறது. 75 சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதிப் பங்குத் தொகையை வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறு. குறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த்துறையில் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
பயிர்க்காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்!
தமிழகப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சம்பா, தாளடி, பிசான பருவ நெற்பயிர்களை வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் எனத் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையினை நீக்கும் பொருட்டு 2022-23-ஆம் ஆண்டில் பயிர்காப்பீட்டு திட்டத்தினைச் செயல்படுத்த தமிழக அரசு காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ. 2,339 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்ட விவசாயிகள் குறித்த தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காளான் வளர்ப்பு பற்றிய ஒருநாள் இலவச பயிற்சி! விவசாயிகளுக்கு அழைப்பு!
கரூர் மாவட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம், புழுதேரியில் ஒரு நாள் இலவச காளான் வளர்ப்பு பயிற்சியானது வரும் நவம்பர் 9-ஆம் தேதி காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் செயல்விளக்த்துடன் கூடிய காளான் வளர்ப்பு தொழில் நுட்பங்கள், இரகங்கள், பூச்சி நோய் கட்டுப்பாடு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், சந்தை படுத்துதல் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் 7904020969 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
கரும்பு விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி!
உலகில் மொத்தம் 114 நாடுகளில், கரும்பு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகிய இரண்டு மூலங்களில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. துணை வெப்பமண்டல நாடுகளில் கரும்பு விளைகிறது. ஆனால் இந்தியாவில் கரும்பில் இருந்துதான் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. பார்த்தால், கரும்பு உற்பத்தியில் இந்தியா முழு நாட்டிலும் முதலிடத்தில் உள்ளது.கரும்பு இந்தியாவில் ஒரு பணப்பயிராகும், இது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. எனவே, கரும்பு விவசாயத்தினை மேலும் ஊக்குவிக்க பல்வேறு மானியத்திட்டங்கள் வரவைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசின் உத்தரவு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. நீண்ட நாட்களாக கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் மூன்று உயர்த்தி. ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
40% மானியம்: தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம்|ரூ. 5 லட்சம் வருமானம் தரும் தொழில்!
சோலார் பம்ப்செட் அமைக்க மானியம்|பழப்பயிர் சாகுபடிக்கு 40% மானியம்|