கொரோனாத் தொற்று காரணமாக சுபநிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளதால் பூக்கள் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.இதனால், அவற்றைக் குப்பையில் வீசப்படும் நிலை உருவாகியுள்ளது.
மலர் சாகுபடி (Flower cultivation)
மதுரை மாவட்டம், திருமங்கலம், அரசப்பட்டி, வலையங்குளம், கப்பலூர், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதி என பல்வேறு பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை, பிச்சி, முல்லை உள்ளிட்டப் பூக்களைப் பயிரிட்டுள்ளனர்.
பூச்சந்தையில் விற்பனை (For sale at the flower market)
இவை வழக்கம்போல் இந்த முறையும் நல்ல மகசூலைக் கொடுத்துள்ளன. பூக்களைச் செடியில் இருந்துப் பறிக்கும் விவசாயிகள் அருகில் உள்ள பூச் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். மொத்தமாக விற்பனை செய்யும்போது நல்ல விலை கிடைக்கும்.
நிகழ்ச்சிகளுக்கு தடை (Prohibition on Functions)
ஆனால் தற்போது கொரோனாத் தொற்றுத் தீவிரமாகப் பரவிவருவதால், சுபநிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூலியே ரூ.50 (The fare is Rs.50)
இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை மார்க்கெட்டில் விலை போகிறது.ஆனால் தோட்டங்களில் பூப்பறிக்கும் ஒருவருக்கே நாள் ஒன்றுக்கு ரூ.50 வரை கூலி வழங்கப்படுகிறது. இவ்வாறு பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால், கூலி கொடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பறிக்கப்படாதப் பூக்கள் (Flowers not plucked)
ஒரு சில விவசாயிகள் தங்கள் விரக்தியின் வெளிப்பாடாகத், தோட்டத்தில் உள்ள செடி களிலேயே பூக்கள் பறிக்ககாமல் விட்டுவிட்டனர். இதனால் அவை மலர்ந்துச் செடியிலேயே உதிர்ந்து விடுகின்றன. பின்னர் ஓரிரு நாட்களில் அவை குப்பையாக மாறிவிடுகின்றன.
இதனால் ஏக்கருக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
குப்பையாகும் பூக்கள் (Garbage flowers)
விவசாயிகள் வேறு வழியின்றி பூக்களை பறித்து கமிசன் கடைகளுக்கு கொண்டு வந்தால் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விலைக்கு எடுக்கப்படுகிறது.அதேநேரத்தில் வாசனைத் திரவிய ஆலைகளுக்கு அளவுக்கதிகமான அளவிற்கு பூக்கள் வருவதால் மல்லிகைப் பூக்களை எடுக்க மறுக்கின்றனர். இத்தகைய இடர்பாடுகளைச் சந்தித்த விவசாயிகள் ஒருகட்டத்தில் விரக்தியடைந்து, பறிக்கப்பட்ட பூக்களையும் குப்பைகளாக மாற்றிக் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை (Farmers demand)
இந்நிலையில், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். மேலும் திருமங்கலம் சுற்று வட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மல்லிகைச் செடிப் பயிரிட்டுள்ளதால் இப்பகுதியில் வாசனைத் திரவிய ஆலை அமைந்தால் பூக்களுக்கு ஓரளவு கட்டுப்படியான விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க...
மண் வளம் பெருக்க உதவும் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி!
வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!