இந்தியாவில், விவசாயத்தின் மூலமான வருமானத்திற்கு வருமான வரி விதிக்கப்படாத நிலையில், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளையும் வருமான வரிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படலாம் என உத்தேசிக்கப்படுகிறது. அதே நேரம் பிஎம் கிசான் திட்டத்தில் வழங்கப்படும் தொகையும் உயர்த்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைப்பெற உள்ள நிலையில், ஒன்றிய அரசின் சார்பில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் தேர்தலை மனதில் வைத்து பெரிய அளவில் வரி திருத்தங்கள் இருக்காது என எதிர்ப்பார்க்கப்பட்டாலும், ஒரு சிலவற்றில் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என பேச்சு எழுந்துள்ளது.
பணக்கார விவசாயிகளுக்கு வருமான வரி:
அதற்கு காரணம், ஆர்பிஐ எம்பிசியின் நிதிக் கொள்கைக் குழு உறுப்பினர் (Reserve Bank Monetary Policy Committee (MPC) ) ஆஷிமா கோயல் சமீபத்தில் அளித்த ரிப்போர்ட் தான். வரவிருக்கும் பட்ஜெட்டுக்கான தனது யோசனைகளை சமர்ப்பித்த ஆஷிமா கோயல், வரிவிதிப்பு கட்டமைப்பில் நேர்மையை ஏற்படுத்த, பணக்கார விவசாயிகளுக்கு வருமான வரி விதிப்பது பற்றி நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் சிந்திக்கலாம் என்று பரிந்துரைத்து உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆஷிமா கோயல் கூறுகையில் , ”பிஎம் கிசான் மூலம் ஏழை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அரசு நேரடியாக உதவித்தொகை வழங்கி வருகிறது. இதை ஈடுகட்ட, பணக்கார விவசாயிகளிடம் அரசு வருமான வரி விதிக்கலாம். நாட்டில் மொத்தம் 3 சதவீத விவசாயிகள் பணக்காரர்கள். எனவே, அதிக வருமானம் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே வருமான வரி விதிக்க அரசு யோசிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிஎம் கிசான் உதவித்தொகை உயர்வு?
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, PM-KISAN யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை அளவை மத்திய அரசு அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
மோடி தலைமையிலான அரசாங்கம் PM-Kisan Samman Nidhi திட்டம் மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்குகிறது. PM Kisan Yojana என்பது மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் கூடிய செயல்படக்கூடிய ஒரு திட்டமாகும். இந்தத் திட்டம் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 24, 2019 அன்று தொடங்கப்பட்டது.
ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக PM-KISAN யோஜனா திட்டத்தின் கீழ் தற்போது வழங்கி வரும் ரூ.6,000 தொகையினை ரூ.8,000 வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை PM-KISAN திட்ட பயனாளிகளான விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 15 தவணைகளாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 விதம் ஆண்டிற்கு ரூ.6000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
16 வது தவணை வருகிற பிப்ரவரி அல்லது மார்ச் மாத மத்தியில் வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது வரை அதுக்குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read also:
PM-Kisan: தகுதியற்ற 81,000- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சிக்கல்!