கனகாம்பரம் செடிகளில் சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் டெல்லி கனகாம்பரம் என்று சில இரங்கல்கள் உள்ளன. இதில் பச்சை நிலத்தில் இருக்கும் கனகாம்பரம் அழகிற்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன.
கனகாம்பரம் செடியின் பருவகாலம்
கனகாம்பரம் செடிகளை ஆவணி மாதத்திலிருந்து தை மாதம் வரை பயிரிடலாம்.மேலும் ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். மழைக்காலத்தில் நடக்கூடாது.
மண் மற்றும் தட்பவெப்பநிலை :
நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்து வண்டல மண் மற்றும் செம்மண்ணில் நடவு செய்வதற்கு ஏற்றது. மண்ணின் அமிலக் காரத் தன்மை 6 முதல் 7.5க்குள் இருக்கவேண்டும். கனகாம்பரம் செடிகள் நிழலைத் தாங்கி வளரும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை குறைந்த பட்சம் மூன்று முறை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு எரு போட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். பின்னர் தேவைக்கேற்ப பகுதிகளாக அமைக்கவேண்டும்.
விதையும் விதைப்பும்
விதைவிப்பதற்கு டெல்லி கனகாம்பரம் இரகத்தை நாம் வேர் வந்த குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.
விதையளவு :
5 கிலோ / எக்டர்
இடைவெளி :
விதைக்காக பயிரிடுவதாக இருந்தால் 60 x 60 செ.மீ இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். டெல்லி கனகாம்பரம் இரகத்திற்கு 60 x 40 செ.மீ.
தேவையான அளவுகளில் மேடைப்பாத்திகள் அமைத்து ஒரு செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து, பின்னர் அவற்றை மணல் கொண்டு மூடவேண்டும். விதைகள் முளைக்கும் வரை தினமும் நீர் விட வேண்டும். விதைகள் விதைத்த 60ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும்.
60 நாட்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 செ.மீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள இடைவெளிகளில் நடவு செய்யவேண்டும். நடும் முன் நாற்றுக்களை எமிசான் (1 கிராம் / லிட்டர் ) கரைசலில் முக்கி நடவு செய்ய வேண்டும் .இந்த வகை இரங்கங்களை நடவு செய்ய ஜுலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் வரையிலான பருவங்கள் மிகவும் உகந்தவை.
ஏழு நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்சவேண்டும். நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நிலத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் வேர் அழுகல் நோய் வரக்கூடும். அதனால் சீராக நீாப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரமாக எக்டருக்கு 25 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து எக்டருக்கு 75 கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச்சத்து, 125 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இராசயன உரங்களை பயன் படுத்தவேண்டும். மேற்கண்ட உர அளவை மீண்டும் ஒவ்வொரு ஆறுமாத இடைவெளியில் கொடுக்கவேண்டும். இவ்வாறு இரண்டு வருடங்கள் வரை தொடர்ந்து இடவேண்டும். உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தை ஒரு எக்டருக்கு 2 கிலோ என்ற அளவில் பயன்படுத்தி நன்கு கலக்கி, நீர்ப்பாயச்சவேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து அஸ்கார்பிக் அமிலம் 1000 பிபிஎம் என்ற அளவில் தெளித்தால் மகசூல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
டெல்லி கனகாம்பரத்திற்கு :
செடிகள் நட்ட 30 நாட்கள் கழித்து எக்டருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ, தழைச்சத்து 40 கிலோ கொடுக்கக்கூடிய உரங்கள் பயன்படுத்த வேண்டும். 90 நாட்களுக்கு பிறகு 40:20:20 கிலோ என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும். இவ்வாறு வருடம் முழுவதும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
செடிகள் நட்ட ஒரு மாதம் கழித்து பூக்க ஆரம்பித்து விடும். நன்கு மலர்ந்த மலர்களை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பறிக்கலாம்.
ஒரு எக்டருக்கு ஒரு வருடத்தில் 2000 கிலோ மலர்கள் மகசூல் செய்யலாம். ஒரு வருடத்திற்கு மட்டுமே டெல்லி கனகாம்பர இரகம் ஒரு எக்டருக்கு 2800 கிலோ மலர்கள் கொடுக்கும்.
மேலும் படிக்க:
குறைந்த முதலீட்டில் மெகா லாபம் தரும் மலர் வியாபாரம்!