விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்குவது மண் தான். பயிர் சாகுபடிக்கு (உழவு போடுவதற்கு) முன் மண்ணை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறாக செய்வதால் மண்ணில் உள்ள சத்துகளின் அளவு , மண்ணில் உள்ள பிரச்சனைக்குரிய களர், உவர் அமில நிலை மற்றும் சுண்ணாம்பு நிலையை தெரிந்து அதற்கேற்ப சீர்திருத்த நடவடிக்கைகளை (RECLAMATION MEASURES) மேற்கொள்ளலாம்.
இந்நிலையில், பிரச்சனைக்குரிய மண்ணில் உள்ள நிலைகள் மற்றும் அதனை கண்டறிந்து நிலத்தினை பாதுகாக்கும் முறைகள் குறித்து வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் பல தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
1) களர் மண்: (ALKALINE SOIL)
இதில் PH 8.5-க்கு மேல் இருக்கும். சோடியம் கார்பனேட் அதிகமாக இருக்கும். இது கரிசல் மண் பகுதியில் அதிகமாக உள்ளது.சேராக உள்ள மண் காயும் போது கெட்டியாக மாறும், இதில் தண்ணீரோ காற்றோ ஊடுருவி செல்ல இயலாது. உழவுதற்கு கடினமாக இருக்கும்.
பயிர்களுக்கு என்ன பாதிப்பு?
சோடியம் உப்பு செடியின் வளர்ச்சியை பாதிக்கும் .செடி வளர்ச்சி குன்றி எரிந்தது போல இருக்கும்.
நிவர்த்தி செய்வது எப்படி?
மண்பரிசோதனை ஆய்வின்படி பரிந்துரைக்கப்பட்ட அளவு ஜிப்சம் இட்டு உழுது பாசன நீர் அல்லது மழை நீரை தேக்கி வடிக்க வேண்டும். தக்கைபூண்டு கொளுஞ்சி போன்ற பசுந்தாள் உரங்களை இட வேண்டும். களர் தாங்கி வளரும் பயிர்களான திருச்சி நெல்1.கோ.48, ராகி பருத்தி, மிளகாய், சூரிய காந்தி போன்ற பயிர்களை பயிரிடலாம்.
2). அமில மண் (ACID SOIL):
இதில் PH 6-க்கு கீழ் இருக்கும். இந்த மண்ணில் நுண்ணுயிர் வளர்ச்சி தடைபடும். இதில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையாக இருக்கும். இதில் சூப்பர் பாஸ்பேட் உரம் இடக்கூடாது.
பயிரின் நிலைமை: பயிரின் வேர் வளர்ச்சி பாதிக்கும். சத்துகள் பயிருக்கு சரிவர கிடைக்காமல் பயிர் வேர் வளர்ச்சியின்றி காணப்படும்.
சீர்திருத்தம் செய்வது எப்படி?
மண் பரிசோதனை ஆய்வு முடிவுகளின் படி சுண்ணாம்பினை விதைப்பு/ நடவிற்கு 10-15 நாட்களுக்கு முன் இட வேண்டும். அமிலதன்மையற்ற உரங்களை இட வேண்டும். நெல் , மக்காசோளம், ஆமணக்கு, எலுமிச்சை, சிறுதானியம், பப்பாளி பயிரிடலாம்.
3) உவர்நிலம் (SALINE SOIL):
இந்த மண்ணில் உப்பின் பாதிப்பு நிலை மத்தியம் நிலையிலும் மற்றும் அதிகமாக இருக்கும். உப்பு அதிகமாக உள்ள நிலத்தில் பயறு வகை பயிர்கள் சரிவர வளராது. நட்ட நாற்று நட்ட படியே வளர்ச்சியின்றி காணப்படும்.
பயிரின் நிலைமை: பயிர்களின் வேர்கள் மண்ணில் உள்ள சத்துகளை எடுக்க முடியாத நிலை, வேர் வளர்ச்சியற்ற நிலை.
தடுப்பு முறைகள்:
இயற்கையான உரங்கள் ( தொழுஉரம் ஆட்டுகிடை ) போன்றவற்றை இடலாம். வடிகாலை சீராக்கி நல்ல தண்ணீரை/ மழை நீரை நிலத்தில் தேக்கி வடிக்க வேண்டும். இவ்வாறாக செய்தால் உப்பு, நீரில் கரைந்து உப்பின் அளவு குறையும். உவர் மண்ணை தாங்கி வளரும் பயிர்களான பருத்தி, மிளகாய், சோளம், தக்காளி போன்றவை பயிரிடலாம்.
4) சுண்ணாம்பு மண் (CALCAREOUS SOIL):
இந்த மண்ணில் கால்சியம் கார்பனேட் அளவு 5% க்கு அதிகமாக இருக்கும். இந்த மண்ணில் தழை, மணி, சாம்பல் சத்து குறைபாடு. பயிர்கள் வளர்ச்சி குன்றிய நிலை. நுண்ணூட்டச் சத்துகள் பற்றாக்குறையாக இருக்கும்.
சீர்திருத்த முறைகள்:
அதிகமாக பசுந்தாள்/ தழை உரங்கள் மற்றும் தொழு உரமிட வேண்டும். கந்தக சத்துள்ள உரங்களை பயன்படுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு நுண்ணூட்டச் சத்துகளை இட வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டு எந்தவித பிரச்சனைக்குரிய மண்ணையும் சீர்திருத்தி சாகுபடிக்கு கொண்டு வரலாம்.
மண்பரிசோதனை செய்ய இதுவே சரியான தருணம் கூட. அறுவடை முடிந்து உழவு போட தயாராக இருக்கின்ற நிலையில் மண்ணை எடுத்து அருகேயுள்ள மண்பரிசோதனை ஆய்வகத்தில் 30 ரூபாய் கட்டணத்தில் பரிசோதனை செய்யலாம். மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தகவல்களில் முரண் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களைத் தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 94435 70289
Read more:
StartupTN- TNAU புதிய மன்றம் தொடக்கம்: வேளாண் பணிகளுக்காக மயாபோட்ஸ்-எக்ஸ் 1 ரோபோட்!