பொதுவாக ஆடிப்பட்டத்தில் மானாவாரியில் சாகுபடி செய்ய வேண்டிய நிலக்கடலை சாகுபடி, ஒரு சில இடங்களில் மழை இல்லாத காரணத்தால் தள்ளி போய் தற்போது விதைப்பு நடைப்பெற்று வருவதுடன் இறவை நிலக்கடலை சாகுபடியும் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொக்கு இல்லாத நிலக்கடலை சாகுபடியினை மேற்கொள்ள உரிய முறையில் உரம் இடுவது மற்றும் களை மேலாண்மை கையாள்வது அவசியம். இந்நிலையில் எவ்வித முறையில் உரம் மற்றும் களை மேலாண்மை மேற்கொண்டால், பொக்கு இல்லாத நல்ல மகசூல் தரும் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள இயலும் என வேளாண் ஆலோசகர் அக்ரி சந்திர சேகரன் சில தகவல்களை கிரிஷி ஜாக்ரானுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
பொதுவாக நிலக்கடலை சாகுபடியில் மண்பரிசோதனை படி உரமிட வேண்டும். பரிந்துரை இல்லாத பட்சத்தில் பொது உர பரிந்துரையின் உரமிட வேண்டும். 5 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும்.
மானாவாரி நிலக்கடலைக்கு உரம் எவ்வளவு ?
4: 4:18 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல்சத்து இடவேண்டும். அதாவது 10 கிலோ யூரியா, 22 கிலோ சூப்பர் பாஸ்பேட், 25 கிலோ பொட்டாஷ் மற்றும் ஜிப்சம் 100 கிலோ இட்டபின் கடைசி உழவில் ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரம் இட வேண்டும். நிலக்கடலையில் பயிர் எண்ணிக்கை சதுரமீட்டருக்கு 33 செடிகள் இருக்க வேண்டும்.
இறவை நிலக்கடலைக்கு எவ்வளவு?
7: 14: 21 என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும் அதாவது ஏக்கருக்கு 20 கிலோ யூரியா, 46 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 50 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இடவேண்டும். அத்துடன் ஜிப்சம் 100 கிலோ மற்றும் 5 கிலோ எம்.என் மிக்ஸர் இட வேண்டும்.
களை மேலாண்மை:
பொதுவாக நிலக்கடலையில்(சாரணை முக்கீரட்டை காட்டு கீரை,அருகு கோரை) போன்ற களைகள் அதிகமாக காணப்படும். அவற்றை நீக்கிட களை எடுக்க வேண்டும் .களை எடுக்காத பயிர் கால் பயிரே என்பதற்கிணங்க இரண்டு முறை 20-25 வது நாளிலும், 40-45 வது நாட்களில் களை எடுக்க வேண்டும்.
நிலக்கடலையில் பயன்படுத்தும் களைக்கொல்லிகள் என்ன?
களைகளை கட்டுப்படுத்த விதைத்த 3 ஆம் நாள் ஈரம் இருக்கும் போது ஆச்சிபுளுபன் ஏக்கருக்கு 350 மில்லி அல்லது பென்டி மெத்திலின் 1250 மில்லியை 200 லிட்டர் தண்ணீர் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். விதைத்த 21 வது நாள் பர்சூட் என்ற களைக்கொல்லியை 300 மில்லி வீதம் தெளிக்கலாம். புல் வகை களைகள் அதிகமாக இருப்பின், டர்கா சூப்பரை 400 மில்லியை 200 லிட்டர் தண்ணீர் கலந்து விதைத்த 20-30 ஆம் நாளில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
களைகளை கட்டுப்படுத்தா விட்டால், நிலக்கடலை பயிருக்கு கிடைக்க வேண்டிய சத்துகளை களைகள் உறிஞ்சுவதால், பயிர் அதிகமாக காய்கள் பிடிக்காமல் விளைச்சல் பாதிக்கப்படும். ஜிப்சம் இடுவதால் மண் இளக்கமாகி நிலக்கடலையின் விழுதுகள் தரையில் இறங்கி அதிக எண்ணெய் சத்துடன் பொக்கு இல்லாத நிலக்கடலை உருவாக்கிட முடியும்.
எனவே நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களுடைய பயிரின் வளர்ச்சியை அதிகபடுத்திட முறையான உரமிட்டு, களை எடுத்தால் நாம் எதிர்பார்த்த திட்டமிட்ட மகசூல் பெறலாம்.தற்போது மழைக்காலம் என்பதால் பயிரின் வளர்ச்சியை துரிதப்படுத்த களை நிர்வாகமும் உரம் இடுவது போன்ற பணிகளை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முரண்கள் இருப்பின் அக்ரி சு.சந்திர சேகரன் (வேளாண் ஆலோசகர்) அவர்களை பின்வரும் அலைபேசி எண் மூலம் தொடர்புக்கொண்டு விளக்கம் பெறலாம். தொடர்பு எண்: 9443570289