தமிழ்நாட்டில் ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமாகவே சம்பங்கி மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சம்பங்கி மலர்கள் அதிகளவு மாலை கட்டுவதற்கும், வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகள் சம்பங்கி மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிகளவு வருமானம் ஈட்டுகிறார்கள். இவ்வாறு செய்வதனால் சம்பங்கி சாகுபடி விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தருகிறது. மேலும் பல வகை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறார்கள்.
சம்பங்கி இரகங்கள்
சிரிங்கார், பிரஜ்வால், அர்கா நிரந்தர், பூளே ரஜனி ஆகியவை ஓரடுக்கு மலர் வகையைச் சார்ந்தது. இதில் பிரஜ்வால் மற்றும் அர்கா நிரந்தரா என்ற இரகங்கள் உயர் விளைச்சலை தரக்கூடியது. சுவாசினி, வைபவ் ஆகிய இரகங்கள் ஈரடுக்கு பூவிதழ் கொண்ட இரகங்கள்.
நடவு செய்ய உகந்த மாதங்கள்
ஜூன், ஜூலை (ஆனி-ஆடி) மாதங்களில் பொதுவாக நடவு செய்யலாம். எப்பொழுதும் தண்ணீர் வசதி இருப்பவர்கள் ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம்.
அளவு
ஒரு ஏக்கருக்கு 500 - 600 கிலோ கிழங்கு தேவை மற்றும் கிழங்குகள் குறைந்தது 25 முதல் 30 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும்.
இலை பேன்
சம்பங்கி செடிகள் இலை பேன் என்ற நோயால் தாக்கப்டுகின்றன. அதாவது இலைகள் சுருங்கி, சுருண்டும் காணப்படும். மேலும் இலைகளை நன்றாக உற்று பார்த்தோமானால் பேன்கள் இருப்பது தெரியும். இந்த இலை பேன் பாதிப்பால் பூக்கள் உற்பத்தியும் பாதிக்கப்படும். இந்த இலை பேன் பாதிப்பைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி புரப்போனோபாஸ் மற்றும் ஒட்டு பசை கலந்து, பாதிக்கப்பட்ட வயலில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
வெட்டுக்கிளியால் ஏற்படும் சேதம்
சம்பங்கி செடிகளில் வெட்டுக்கிளி இலைகளையும், மலர் மொட்டுக்களையும் வெட்டி தின்று நாசம் ஆக்கும். இதனால் சம்பங்கி மகசூல் இழப்பு ஏற்பட பெரும் வாய்ப்பு உள்ளது. இந்த வெட்டுகிளிகளை அளித்திட 15 நாட்களுக்கு ஒருமுறை டைமீத்தேயேட் என்று கூறப்படும் பூச்சி மருந்தை, 1 லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில் 3 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
மாவுபூச்சி
பருவநிலை மாற்றம் ஏற்ப்படும் சமயத்தில் சம்மங்கியில் மாவுபூச்சிகளின் தாக்கம் அதிகம் காணப்படும். இந்த மாவுபூச்சி பாதிப்பில் இருந்துக் கட்டுப்படுத்த, செடியில் மடங்கியிருக்கும் இலைகளை பிடுங்கி போட்டு தீ வைக்க வேண்டும் அதை தொடர்ந்து வெறும் தண்ணீரை செடிகள் மீது 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி மீன் எண்ணெய், 30 மில்லி நிம்புசிடின், 10 மில்லி இமிடாகுளோர் மற்றும் ஒட்டுதிரவம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் கோமியம் கலந்து சேர்த்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்
நூற்புழு தாக்கம்
நுற்புழு தாக்கத்தின் அறிகுறியாக சம்பங்கி வேர்களில் கருப்பு நிற சிறு முடிச்சுகள் இருக்கும். இலைகள் இளம் மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நூற்புழு தாக்குதலின் அறிகுறி காணப்பட்டால் செடி ஒன்றுக்கு 20 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 10 கிராம் பெசிலியோமைசிஸ் ஆகியவற்றை வேர்பகுதியில் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோயினால் பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி, பூக்கள் அதிகம் புக்காமல் இருக்கும். சம்பங்கியில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீர் 10 கிராம் சூடோமோனஸ் கலந்து, இலைகள் மற்றும் தூர் பகுதியில் தெளித்து இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம் அல்லது மாங்கோசெப் என்னும் மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
மேலும் படிக்க
ஆசிரியர் தொழிலுடன் சேர்த்து, தினமும் 8 கிலோ சம்பங்கி பூ சாகுபடி செய்து அசத்தும் பெண் விவசாயி!