தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், சின்ன வெங்காயம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் சின்ன வெங்காயம் அழுகுவதைத் தவிர்க்க தேனி விவசாயிகள் பிரத்யேக முறையைக் கையாளுகின்றனர்.
தமிழக மக்களின் சாம்பாருக்கு கூடுதல் சுவை கொடுக்கும் சாம்பார் வெங்காயம், மாநிலத்தின் பல பகுதிகளில் பயிரிடப்படுவது வழக்கம்.
தர்மபுரி
அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், சின்ன வெங்காயத்தை 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடுவார்கள். அதன்படி நடப்பாண்டு அன்னசாகரம், எர்ரப்பட்டி, வெங்கட்டம்பட்டி, தம்மணம்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி, குழியனூர், இண்டூர், அதகபாடி உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அதகபாடி அருகே, கடந்த வைகாசி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அறுவடையின்போது பெய்த மழை காரணமாக, சின்ன வெங்காயத்தில் குறிப்பிட்ட அளவு அழுகிவிட்டது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வைகாசி பட்டத்தில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட்டிருந்தோம். நடப்பாண்டில் அறுவடையின் போது, தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கி வெங்காயம் அழுகிவிட்டது. இதனால் நடப்பாண்டில் ஒரு ஏக்கருக்கு 8டன் மட்டுமே மகசூல் கிடைத்திருக்கிறது.
சுமார் ஒரு டன் வரை வெங்காயம் மழையின் காரணமாக அழுகிவிட்டது. ஒரு கிலோ சின்னவெங்காயம் 28 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டபோதிலும், பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது என்றார்.
தேனி
இதேபோல் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் சின்னவெங்காயம் சாகுபடி பரவலாக நடைபெறுகிறது. நடவு செலவு, உரம், கூலி என ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 வரை செலவாகிறது. அவை 3 மாதங்களில் அறுவடை செய்யலாம். ஒரு கிலோ ரூ.20க்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் தினமும் மாலை நேரங்களில் மழை பெய்வதால் அழுகும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால் இங்கு வெங்காயம் அழுகுவதை தவிர்க்க விவசாயிகள் வெங்காயத்தை செடியுடன் பறித்து அதே இடத்தில் போட்டு வைக்கின்றனர்.பகல் நேரங்களில் வெயில் அடிப்பதால் காய துவங்குகிறது. பின்னர் மழை பெய்தாலும் அழுகுவதில்லை.
இவற்றை ஒரு வாரம் கழித்து விற்பனைக்கு மார்க்கெட்டிற்கு அனுப்ப முடியும். இதன் மூலம் நஷ்டத்தை தவிர்க்கலாம். இந்த வழிமுறையைப் பின்பற்றியே விவசாயிகள் தற்போது சின்ன வெங்காயத்தைப் பாதுகாத்து வருகின்றனர்.
மேலும் படிக்க...
ஆடியில் விதைக்கத்தவறிவிட்டதா? கவலைவேண்டாம், சாமை விதித்து லாபம் ஈட்டலாம் வாருங்கள்!