இறக்குமதியை குறைக்கும் விதமாக இமயமலைச் சமவெளியில் பெருங்காயம் பயிரிடப்பட்டு, சாகுபடிக்கு மேற்கொண்ட சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்ற (CSIR) ஆய்வகத்தின் உதவியுடன் இமாலய உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான (IHPT), இமயமலையில் உள்ள லாஹுல் சமவெளியில் பெருங்காயப் பயிர் விளைச்சல் குறித்து சோதனை முயற்சி மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள விவசாயிகளுடன் இணைந்து சிஎஸ்ஐஆர்- ஐஹெச்பிடி நிறுவனங்கள், பெருங்காய விதைகளை வாங்கி அதற்கான வேளாண் தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
பெருங்காயம் இறக்குமதி
இந்தியாவின் முக்கிய வாசனைப் பயிர்களில் பெருங்காயம் மிக முக்கியமானது. இதில் மருத்துவகுணங்களும் அதிகம் நிறைந்துள்ளன. ஆப்கானிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து ஆண்டுக்கு சுமார் 1200 டன் பெருங்காயத்தை சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்கிறது.
முதல் விதை விதைப்பு
பெருங்காயம் (அசஃபோடிடா -Asafoetida) இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படுவதில்லை. இந்தியாவிலும் அதன் சாகுபடியை துவக்கும் வகையில் கடந்த 15ம் தேதி CSIR- IHPT நிறுவன இயக்குனர் டாக்டர் சஞ்சய்குமார், இமயமலையில் உள்ள லாஹுல் சமவெளியில் க்வாரிங் கிராமத்தில் முதல் விதையை பயிரிட்டு தொடங்கி வைத்தார்.
இமாச்சல வேளாண்துறை உதவி
ஈரானில் இருந்து 6 வகையான பெருங்காய விதைகள் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு பயிரிடப்பட்டுள்ளது. குளிர்ந்த மற்றும் வறண்ட நிலங்கள் இந்த வகையான பயிர்களுக்கு உகந்ததாக இருப்பதால், இமயமலைப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இமாச்சலப் பிரதேச மாநில வேளாண் துறையும் சிஎஸ்ஐஆர்- ஐஹெச்பிடி நிறுவன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, அப்பகுதி விவசாயிகளுக்கு பெருங்காயத்தைப் பயிரிடுவது குறித்த பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளது.
மேலும் படிக்க...
எல்லை பாதுகாப்பு படையில் வேலை! எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள் - முழுவிபரம் உள்ளே!
விவசாய தொழில் செய்கிறீகளா? நபார்டு வங்கியில் ரூ.20 லட்சம் கடனில் 36% - 44% மானியம் பெற்றிடுங்கள்...